பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 179


        ‘வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
        புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர் 15

        செல்விருந்து ஆற்றித், துச்சில் இருத்த,
        நுனை குழைத்து அலமரும் நொச்சி
        மனகெழு பெண்டுயான் ஆகுக மன்னே!


கொடிய வாயினரான, அலர் கூறுதலையே தொழிலாகக் கொண்டு, அதன் பால் விருபபுற்றுப் புறங்கூறித் திரியும் பெண்டிர்கள், 'மகிழ்ச்சியடைவாள் என்றாலும் வருத்த மடைவாள் என்றாலும் அதனை அவள் தாயே ஆராய்ந்து உணர்வாளாக' என்று கருதித், தாம் வாயடக்கி இருக்கமாட்டார்கள். “நின் மகள் இப்பபடிப்பட்ட தன்மை உடையவள் இப்படிப்பட்ட ஒழுக்கம் உடையவள்” என்று, பலநாளும் எனக்கு வந்து சொல்லுவார்கள்.

அதனைக் கேட்டும், ‘ இவள் நாணங் கொள்வாளே என்று எண்ணி, அவளுக்குச் சொல்லவும் செய்யாதவளாக இருந்தேன். அவள் உள்ளம் வருந்துமென, அப்படி மிகவும் அலரினை மறைத்து வாழ்ந்த யான், இந்த வறிய மனையிலே தனித்து ஒழிந்துவிட, அவளோ அவனுடன் போயினள்.

என் மகள், ‘தாய் அறிந்தால் இங்கு வாழும் வாழ்க்கை எளிதாயிருப்பது இல்லை என்று எண்ணியவளாக, கழல் தரித்த காலையும், மின்னொளி பரப்பும் நீண்ட வேலையும் உடைய இளையோன் தன் முன்னே செல்லத், தான் அவனைப் பின்தொடர்ந்து செல்பவளாகப், பல மலையடுக்குகளை உடைய காட்டின் வழியாகவும் சென்றனள். ‘

அவளுக்கு, யான் அப்படிப்பட்டவள் அல்லாமை நன்கு வெளிப்படுமாறு செய்தல் வேண்டும். விலங்குகள் சென்ற தடங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கும் மலையடியிலேயுள்ள ஒடுக்கமான பாதைகளிலே, அவளுக்கு யாதும் இடையூறு ஏற்படாதவாறு, அவளுக்கு முன்னரே சென்று, பொலிவு இழந்திருக்கும் பெரிய மலையைச் சார்ந்த தனிமை கொண்ட சிறிய ஊரிலே, வரும் விருந்தாக அவர்களை ஏற்று உண்பித்துத் தங்குமிடத்திலும் இருத்தி உதவுவேன். அதற்கு

முனைகள் தளிர்களுடன் அசைந்தாடும் நொச்சி சூழ்ந்த மனைக்குரிய பெண்டாக யானும் சென்று ஆவேனாகுக!

என்று, மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியவளாக வருந்தியிருந்தாள் என்க.