பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

அகநானூறு - மணிமிடை பவளம்



விளக்கம்: ‘அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் நீடலர்’ என்றதனால், அதனினும் தலைவியின்பால் அவன் பெறும் இன்பச்செவ்வி சிறப்புடையது என்பதனையும், அவள் அவற்றினும் சிறந்தவள் என்பதனையும்,அதனால் அவன் அவளை மறவாது வந்து சேர்வான் என்பதனையும் கூறினாள்.

214. ஆருயிர் அணங்கும்!

பாடியவர்: வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். திணை: முல்லை. துறை: பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(வேந்தனுக்கு உதவியாகப் படைத்தொழில் ஏற்றுச் சென்ற தலைமகன் ஒருவன், பாசறையிலே தனித்திருந்து, தன் அன்புக் காதலியை நினைந்து இவ்வாறு தன் நெஞ்சிற்குக் கூறுகின்றான்.)

        அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்,
        பகலுடன் கரந்த, பல்கதிர் வானம்
        இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்,
        பெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது,
        வேந்தனும் வெம்பகை முரணி, ஏந்திலை, 5

        விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை,
        அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே;
        அமரும் நம்வயி னதுவே: நமர்என
        நம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி
        யாங்குஆ குவள்கொள் தானே - ஓங்குவிடைப் 10

        படுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி
        ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப்,
        பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப,
        ஆருயிர் அணங்கும் தெள்இசை
        மாரி மாலையும் தமியள் கேட்டே? 15

அகற்சியையுடைய பெரிய வானத்து இடமெல்லாம் மறையுமாறு, எங்கும் கவிந்து, பல கதிர்களையுடைய ஞாயிற்றையும் முழுக்கவும் மறைத்துக் கொண்டிருக்கின்றன, கார் மேகங்கள்; பெரிய களிறுகளின் பிடிகளுடன் கூடிய யானையினத் தொகுதிகளின் உள்ளம் குளிருமாறு, பெரும் பெயலாகிய மிக்க மழைத்துளிகளை வீசிப் பொழிதலையும் அவை விடாதிருக்கின்றன.

நம் வேந்தனும், வெம்மையான பகைவரோடு மாறுபட்டு, நிமிர்த்த இலையினையுடைய ஒளிவிடுகின்ற நீண்ட வேல்கள்