பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அகநானூறு - மணிமிடை பவளம்


        எப்பொருள் பெறினும் பிரியன்மினோ, எனச்
        செப்புவல் வாழியோ, துணையடை யீர்க்கோ; 15

        நல்காக் காதலர் நலன்உண்டு துறந்த
        பாழ்படு மேனி நோக்கி நோய்பொர,
        இணர்இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
        எயிறுதீப் பிறப்பத் திருகி
        நடுங்குதும்- பிரியின்யாம் கடும்பனி உழந்தே. 20

தோழி! மழை பொழிந்து, பின் எத்திசைகளையும் வெளியாக்கிய வெண்மேகம், கொட்டப்பெற்ற பஞ்சானது வெண்மையுற்றாற்போல விளங்கும் சிறிய தூவலைத் தூவுதலையும் ஒழிந்தது. அகன்ற வயலிலே நீண்ட மூங்கில் போலத் தோன்றும் கரும்பின் திரண்ட காம்புகளையுடைய பெரிய பூக்கள் கோடைகாலத்துப் பூளைப்பூவைப்போல வாடைக் காற்றோடு சேர்ந்து எங்கும்பரவும். பசுமையான இலைகள் நெருங்கியிருக்கும் புதர்களில் எல்லாம் பகன்றை யானது நீலம் ஊட்டப்பெற்ற பச்சை நிறத்தை மறைத்துக் கிடுகிற்பதித்த வட்டக் கண்ணாடிபோல, வெண்மையாக மலர்ந்திருக்கும். கொழுமையான இலைகளை யுடைய அவரையின் வளமான அரும்புகள் இதழ் விரிந்திருக்கும். முறையாகத் தோன்றிய தோன்றியின் ஒள்ளிய பூக்களும் தம் கட்டவிழ்ந்து மலர்ந்தன. கொல்லை எல்லாம் பறவையினங்கள் கல்லென்னும் ஒலியோடு ஆரவாரஞ் செய்யும். தம் காதலரைப் பிரிந்து வாழும் காதலியர் தம் அழகெல்லாம் இழந்தவராக நடுங்கித் துன்புறுகின்ற, அத்தகைய பனிக்காலமும் வந்துவிட்டது. அதனால்,

‘இந்தப் பருவம் பொருத்தமானது அன்று எனவும், எத்தகைய பொருளைப் பெறுவதானாலும், பிரியாதீர் எனவும், எமக்குத் துணையுடையவரான அவர்க்கு நான் சொன்னேன்’ என்று, நீ அவரிடத்தே சென்று சொல்வாயாக.

அதற்கு இசைந்து நமக்கு அருள் செய்யாதவராகக் காதலர் பிரிந்து சென்றால், யாம், நமது நலத்தினை உண்டு . கைவிட்டதனால் பாழ்பட்டுப்போகும் உடலினை நோக்கி, நோய் படர்ந்து வருத்த, மதுகை இற்று உடைந்துபோன நெஞ்சத்துடன், அவருடைய கூடலை விரும்பிக், கடுமையான பனித்துன்பத்திலே கிடந்து வாடிப், பற்களிலே தீப்பொறி பறக்கப் பற்கடித்தபடி குளிரால் நடுங்குவோம் என்பதனையும் சொல்வாயாக.

என்று, பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதுரச் சொன்னாள் என்க.