பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

அகநானூறு - மணிமிடை பவளம்


        ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள,
        அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
        முல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத,
        எல்லை போகிய புல்லென் மாலைப்
        புறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர், 15

        கழிபடர் உழந்த பனிவார் உண்கண்
        நல்நிறம் பரந்த பசலையள்
        மின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே.

தேரைச் செலுத்தும் தொழிலிலே நல்ல வெற்றித் தன்மையினைக் கொண்ட பாகனே!

மேகம் மழைபொழிய, அதனால் வெள்ளம் தோன்றும் காலத்திலே, நுண்மையான அறல்மணல் பரந்த குளிர்ந்த நீர்நிலைப் பக்கங்களிலே, வரிசையாகப் பறத்தலையுடைய அன்னப் பறவைகள், தோன்றும். அவற்றைப் போன்ற வெண்ணிறமுடைய, விரைந்துசெல்லும் இயல்பினையுமுடைய, புல்லிய பிடரிமயிரினையுமுடைய, செருக்கு வாய்ந்தவை நின் தேரின் குதிரைகள். அவற்றை மெல்லக் கொண்டு பூட்டிய கடிவாளவாரினை, ஒருங்கே பொருத்தமாகப் பற்றிக் கொள்வாயாக பல ஆரங்களையுடைய சக்கரங்கள் நிலத்திலே பதிந்து, மென்னில வழியை அறுத்துக்கொண்டு போகுமாறு, வேகத்தால் காற்றோ என மயக்கம் ஏற்படுமாறு, நூல் நெறிப்படி இயன்றதும், கண்ணின் நோக்கினை ஒழிக்கும் பண்ணுதல் அமைந்ததுமான, நெடிய தேரினைச் செலுத்துவாயாக.

துள்ளிச் செல்வதான இளைய மானின் பிணையானது, நெருங்கிய தழையினை மிகவும் தின்று வெறுப்புக் கொண்டதாகத் தன் ஆண்மானுடன் கூடும் ஆர்வத்துடன், இடையூறு இல்லாதபடியாகத் துள்ளித் திரியும். அழகிய சிறையினையுடைய வண்டின் மென்மையாகப் பறத்தலையுடைய கூட்டம், முல்லையின் கறிய மலரின் பூந்தாதுக்களை விருப்ப முடன் ஊதிக்கொண்டிருக்கும். பகற்பொழுது போய்விட்ட ‘புல்” என்னும் அத்தகைய மாலைக் காலத்திலே, முல்லை நிலத்தை ஒட்டியிருந்த, வாழ்வதற்கு இனிதான நல்ல ஊரிலே,

மிகுந்த துன்பம் உற்று நீர் சொரியும் மையுண்ட கண்களையும், நல்ல நிறமெல்லாம் ஒழிந்து பசலைபடர்ந்த மேனியினையும்உடையவளாகியிருக்கும் நம்தலைவியின், மின்னலைப் போன்ற கூந்தலில் பின்னிக்கிடத்தலாகிய சிக்குகள் விட்டுப் போகுமாறு தேரிலேறி, மிக விரைவாகத் தேரைச் செலுத்துவாயாக!

என்று, தலைமகன் தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.