பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 265


தலைவி, அவன் வீட்டுக்கு வரவும், அவனுடைய உறவை மறுத்து இப்படிக் கூறுகின்றாள்.)

        பினர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
        கதிர்மூக்கு ஆரல் களவன் ஆக,
        நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
        மலிநீர் அகல்வாய் யாணர் ஊர!
        போது ஆர் கூந்தல் நீவெய் யோளொடு 5

        தாதுஆர் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு
        ஆடினை என்ப நெருநை, அலரே
        காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
        ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்,
        சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
        இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,
        பதினொரு வேளிரோடு வேந்தர் சாய,
        மொய்வலி அறுத்த ஞான்றை,
        தொய்யா அழுந்துர் ஆர்ப்பினும் பெரிதே.

சருச்சரையினையுடைய வயிற்றினையும் பிளந்த வாயினையும் கொண்ட ஆண் சங்கானது, ஒளியுடைய மூக்கினதாக ஆரல்மீன் சான்றாக, ஆழமான நீர்ப்பெருக்கத்தையுடைய பொய்கையிலே, தன் துணையான பெண் சங்கினோடும் மணம் கூடும், நிர்வளம் நிறைந்த அகன்ற வயல்களின், புதுவருவாயினை உடைய ஊரனே!

“பூக்கள் நிறைந்த கூந்தலினளான நின்னால் விருப்பப் பட்ட பரத்தையுடனே, பூந்தாதுகள் மலிந்த குளிர்ந்த காஞ்சிமரச் சோலை சூழ்ந்த அகன்ற ஆற்றினிடத்தே, நேற்று நீயும் புனல் விளையாடினை” என்று, பலரும் சொல்வார்கள். அதனால் எழுந்த பழிச்சொற்களின் ஆரவாரம் -

மிக்க சினமும் ஆற்றலுமு.ைய பெரும்புகழினனான கரிகால் வளவன் ஆரவாரம் மிகுந்த கள்வளத்தையுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்திலே, சீர்மை நிறைந்த பகை மன்னவர்கள் மாறுபட்டு எழுந்த போரினுள்ளே, அவர்களது முழங்கும் ஒலியுடைய முரசங்கள் அனைத்தும் போர்க் களத்தேயே ஒழிந்துபோகுமாறு, அப் பதினொரு வேளிர்களுடன் இருபெரு வேந்தரும் ஆகிய அனைவரும் தம் நிலையழிந்து தோற்று ஒடுமாறு, அவர்களுடைய மிகுதியான அற்றலை எல்லாம் ஒழித்த அந்நாளிலே, அழுந்துர்க்கண்ணே எழுந்த குறையாத ஆரவாரத்தினுங் காட்டில் பெரிதாயிருக்கின்றதே!