பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

அகநானூறு - மணிமிடை பவளம்



264. தம் நிலை அறிந்தாரோ?

பாடியவர்: உம்பற்காட்டு இளங்கண்ணனார். திணை: முல்லை. துறை: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.

(தலைவன் வேந்துவினை முடித்தற்பொருட்டுச் சென்றவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்காலத்தும் வராதவ னாயினான். தலைவியின் வாட்டமும் கூதிர்க்காலத்திலே மிகவும் அதிகமாயிற்று. தலைவியின் வருத்தத்தைத் தீர்க்க முயன்றதோழி, ‘அவன் வருவான்; நீ ஆற்றியிருவென வற்புறுத்த, அவளுக்குத் தோழி இவ்வாறு தன் நிலையை விளக்கி எதிருரை கூறுகின்றாள்.)

        மழையில் வானம் மின்அணிந் தன்ன,
        குழையமல் முசுண்டை வாலிய மலர.
        வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
        பெரிய துடிய கவர்கோற் கோவலர்,
        எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு, 5
        
        நீர்திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர;
        நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து,
        ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப்
        பேரிசை முழக்கமொடு சிறந்துதனி மயங்கிக்,
        கூதிர்நின் றன்றால், பொழுதே! காதலா 10

        நம்நிலை அறியார் ஆயினும், தம்நிலை
        அறிந்தனர் கொல்லோ தாமே-ஒங்குநடைக்
        காய்சின யானை கங்குல் சூழ,
        அஞ்சுவர இறுத்த தானை
        வெஞ்சின வேந்தன் பாசறை யோரே? 15

மழையற்ற வானமானது, விண்மீன்களை அணிபெறத் தன்னிடத்தே கொண்டு விளங்கினாற்போலக், குழைநிறைந்த முசுண்டைச் செடியானது, வெண்பூக்கள் தன் மேற்புறமெல்லாம் மலர்ந்தனவாகத் தோன்றுகின்றது. வரிகளையுடைய வெண் காந்தளின் வளைந்த குலையிலேயுள்ள பெரிய பூக்களைக் கோவலர்கள் மிகுதியாகச் சூடிக்கொண்டுள்ளனர். கவர்த்த கோலினைக் கொண்டிருக்கும் அவர்கள், பகற்பொழுதிலே மழையிலே நனைந்து வருந்திய பலவாகிய ஆன்நிரைகளோடும், நீர் விளங்கும் கண்ணிகளை உடையவர்களாக, ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மிக்க தொலைவிடத்திற்குச் சென்ற மேகங்கள், பெரிதான இடி முழக்கத்துடனே சிறப்புற்றுப்