பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

அகநானூறு - மணிமிடை பவளம்


எனலாம். இப்பாட்டு எதிர்காலம் நோக்கிற்று எனக்கொண்டு, “வந்தனர்’ என்பது, வருவார் விரைந்து என்ற பொருளினையே தருவது எனவும் உரைப்பர்.

பாடபேதங்கள்: 9, மஞ்சள் நீர்ப்புறம் பொடிய.22. பெருநிழற் கானந் தழிஇய. .

270. நும் ஊர் நினைப்பீர்!

பாடியவர்: சாகலாசனார். திணை: நெய்தல். துறை: பகற் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவுகடாயது. சிறப்பு: குட்டுவனுக்கு உரிய கழுமலம் என்னும் ஊரைப் பற்றிய செய்தி.

(பகற் குறியிடத்தே தன்னுடைய உளங்கலந்த காதலியைத் தழுவி இன்புற்றுச் செல்லுகின்றான் ஒரு தலைவன். அவனிடம், இரவிலே நின் துணை பெறாததனால் தலைவிதுயிலாது துன்புறுகின்றாள் எனச் சொல்லுகின்றாள் தோழி. இதனால் எஞ்ஞான்றும் கூறியிருப்பதற்குத் தகுதியான வரைந்து கொள்ளலிலே மனஞ்செலுத்துக என்றனளாகும்.)

        இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்,
        புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
        இனமீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
        மெல்லம் புலம்ப நெகிழ்ந்தன, தோளே,
        சேயிறாத் துழந்த துரைபிதிர்ப் படுதிரை 5

        பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயும்
        கானல் பெருந்துறை நோக்கி, இவளே,
        கொய்சுவற் புரவிக் கைவண் கோமான் .
        நல்தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
        அம்மா மேனி தொல்நலம் தொலைய, 10

        துஞ்சாக் கண்ணள் அலமரும், நீயே,
        கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
        சேவலொடு புணராச் சிறுகரும் பேடை
        இன்னாது உயங்கும் கங்குலும்,
        நும்ஊர் உள்ளுவை; நோகோ, யானே. 15

சிறிய குடியிருப்புக்களை உடையது பாக்கம். அங்குப் புலால் நாற்றமும் நிறைந்திருக்கும். அங்குள்ள மீனினத்தை வேட்டையாடுவோரான பரதவர்கள், பெரிய உப்பங்கழியிலே மலர்ந்திருக்கும் வளம்வாய்ந்த இதழ்களையுடைய நீலப் பூக்களைப், புலிநகக் கொன்றையின் பூக்களுடனே கலந்து சூட்டிக்