பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. அவிர் அற - ஒளியற. 2. பகலழிதோற்றம் பகற் காலத்திலே மழுங்கித் தோன்றுகின்ற தோற்றம், தவலில் உள்ளம் - நீங்காத நெஞ்சம். 6. நோனாது - பொறுக்காது. 8. வருதிறம் - வரும்வழி; வரும் தன்மையுமாம். 10. பொத்து - பொந்து. 14. காமர் - அழகிய 16. எருத்தம் - கழுத்து.

விளக்கம்: பிரிவினால் முகம் ஒளியிழந்து தோன்றுவதனைப் பகற்காலத்தே தோன்றும் நிலைக்கு ஒப்பிட்டனர் கொடிய குணம் உடையதான வேங்கையும் தன் பிணவின் மீது அன்புடையதாக விளங்கும்போது, நம் காதலர் நம்மீது அருளின்றி இருப்பது ஏனோ எனவும் கவலையுற்றாள். சேவற்கழுத்துப் போலச் சிவந்த முருக்கம்பூவினை வண்டு ஊதித் தேனுண்ணும் இளவேனிலிலே, அவர்மட்டும் என்பால் விரும்பி வரக் காணேனே எனவும் கலங்கினாள்.

பாடபேதங்கள்: 7. செறும்பின் அனைய 11. அசைவினர் இருக்கும், 17 புன்காய் முருக்கின்.

278. யாம் குளிப்போமோ!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

(வானத்திலே மேக்ம் இருண்டு இடித்து மின்னலிட்டு விளங்கும் நள்ளிரவு வேளை; தலைவனின் வருகையை இரவுக் குறியிடத்திலிருந்து எதிர்பார்த்திருக்கின்றாள் தலைவி. அவளுடனிருக்கும் தோழி, தலைமகன் கேட்குமாறு, தன்னுடைய துயரத்தினை இப்படிக் கூறுகின்றாள்.)

        குணகடல் முகந்த கொள்ளை வானம்
        பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
        தோல்நிரைத் தனைய ஆகி, வலன்ஏர்பு
        கோல்நிமிர் கொடியின் வசிபட மின்னி,
        உரும்உரறு அதிர்குரல் தலைஇப், பானாள், 5

        பெருமலை மீமிசை முற்றின ஆயின்,
        வாள்இலங்கு அருவி தாஅய், நாளை,
        இருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டி
        வருவது மாதோ, வண்பரி உந்தி,
        நனிபெரும் பரப்பின் நம்உர் முன்துறைப், 10

        பனிபொரு மழைக்கண் சிவந்த, பானாள்
        முனிபடர் அகல மூழ்குவம் கொல்லோ!