பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

அகநானூறு - மணிமிடை பவளம்



விளக்கம்: முன், அச்சம் நீங்குமாறு நம்மைத் தெளிவித்தவர் அவர். ஆனால், இன்றோ, நாம் நம் உயிர் நீங்கும் நிலையினராக வாடி நலிந்தும், நம் உயிர் நீங்கிய காலத்து எழும் நெய்தற் பறையொலியைப் போல ஊரலர் பெரிதாக எழுந்தும், நம்மேல் அருள் கொண்டவராக வந்தாரில்லையே?’ என வருந்துகின்றாள்.

பாடபேதங்கள்: 1. செல்வது. 2 அகலுள் ஆண்மை அகலும் நாண்கை. 5. வல்வில் கட்டி, 6. அவ் வரா விளிம்பில்.

282. பலிக்கடன் செலுத்துவோம்!

பாடியவர்: தொல் கபிலர். திணை: குறிஞ்சி. துறை: 1. இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி தலை மகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 2. தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகன் சொல்லியது உமாம். சிறப்பு: குறிஞ்சியின் வளத்தைப் பற்றிய செய்தி.

(தலைவன் விரைந்து வந்து தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என விரும்பிய தோழி, தலைமகட்குச் சொல்லுவது போலத் தலைமகன் கேட்குமாறு கூறுகிறாள் அல்லது, தலைமகன் வரைவிடைப் பிரிந்த காலத்தே, தம்மவர் அவனுக்குத் தலைவியைத் தர இசைந்த செய்தியைச் கூறித் தலைமகளின் பிரிவுத் துயரைத் தோழி நீக்குகிறாள்.)

         பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
         செறிமடை அம்பின், வல்வில், கானவன்
         பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு,
         நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்,
         கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப, 5

         வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
         தெண்நீர் ஆலி கடுக்கும் முததமொடு
         மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
         சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்
         வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்கு 10

         இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
         எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்வாய்
         அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
         சாயிரைத் திரண்ட தோள்பா ராட்டி,
         யாயும், அவனே என்னும், யாமும், 15

         “வல்லே வருக, வரைந்த நாள்; என,
         நல்இறை மெல்விரல் கூப்பி,
         இல்லுறை கடவுட்கு ஒக்குதும், பலியே!