பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/374

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 359



தோழி! கருமையான சேற்றுக் குழம்பினைக் கொண்ட வயலினிடத்தே, நாட் காலையிலே சென்ற, கொழுமீன் உணவைக் கொண்டவராகிய புற்கென்ற தலைமயிரையுடைய சிறுவர்களின் நுண்ணிய கறிற்றினாலாகிய அழகிய வலையிலே தன் சேவல் அகப்பட்டதாகத் தலையிற் கொண்டையினையுடைய அக் கொக்கின் பசுமையான கால்களையுடைய பேடையானது, தனித்துத் தான் மிகவும் வருந்தும். அப்படி அது வருந்தும் பொழுதிலே, மெல்லும் இரையினையும் தின்னாது துன்புறும் தன் குஞ்சினைத் தழுவியவாறே, “ஒய் என்று, அழகிய இடத்தையுடைய பனை மரத்தின்கண் சென்று அமர்ந்து, தன் அன்பு தோன்ற ஒலித்துக்கொண்டே இருக்கும். அத்தகைய, சிறிய பலவாகிய பழங்குடியினர்களைக் கொண்ட, கடற்கரை நாட்டின் தலைவன் நம் காதலன். அவன்.

கழியினைச் சேர்ந்துள்ள புன்னையின் உதிர்ந்த பூக்களையுடைய கானற்சோலையிலே, அன்பு நீங்காத நெஞ்சத்துடனே, தனிமையாளனாக வந்து நம்மைக் கூடி இன்புறுத்தாதற்கு முன்பாகவும், என் கண்கள்,

வெண்மையான கொம்புகளையுடைய யானையினைப் போன்ற போர் வெற்றினையுடைய குட்டுவனது, தெளிந்த அலைகள் பொருந்திய பரப்பினிடத்தேயுள்ள தொண்டியின் முன்துறையிலே, வண்டு உண்ணலால் மலர்ந்த பெரிய குளிர்ச்சியான நெய்தற்பூவின் நீலமணி போன்ற அழகு மாட்சிமையினை உடைய நலத்தினைக் கைவிட்டுப், பொன்போலும் நிறத்தினைக் கொண்டனவே! இஃது என்னவோ?

என்று, இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. குடுமி - கொண்டை ஆண் கொக்கின் தலையுச்சியிலேயுள்ள இறகுகள். 2. அள்ளல் - குழம்பு போன்ற தன்மை அளல் எனவும் வழங்குவர். 3. வல்சி உணவு, 5. அல்குறு பொழுது - தனித்த பொழுது 6 பைதல் வருத்தம், 9. அழிபூ உதிர்ந்த பூ மிகுந்த பூக்களும் ஆம் 10. தணவா - அன்பு நீங்காத 16. பொன்னேர் வண்ணம் கொளல் - பசலை பாய்தல்.

உள்ளுறை: தன் சேவல் வலையிற்பட, உணவும் மறந்த பனைமேற் சென்றிருந்து, பைதற் பிள்ளையை அணைத்துக் கொண்டு அலறும் கொக்குப் பேட்டினையுடைய ஊரினன்; அவனைப் பிரிந்து யாம் வருந்தும் நிலையினை உணராமற் போனானே என்று கொள்க; பயன், வரைவு வேட்டல் என்க.