பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

அகநானூறு - மணிமிடை பவளம்


போனாலும், நம்முடைய எழிலை எல்லாம் சிதைத்தும், நம் இன்பத்தை வாயாது தடுத்தும், நம் தாயின் மனத்திற் சென்று தங்குவதாயிற்று எனக் கொள்க.

பாடபேதங்கள்: 10. வன்கட் கானவன்.

293. மயக்கம் எதனாலோ?

பாடியவர்: காவன் முல்லைப் பூதனார். திணை: பாலை. துறை: 1. பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனின் குறிப்பறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2. தலை மகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளுக்குச் சொல்லியது:உமாம்.

(1. பொருள்தேடி வருதலிலே தலைவன் மனஞ் செலுத்து பவன் ஆயினான் என்பதனைச் சில குறிப்புக்களால் தலைவியும் உணர்கின்றாள். தன் உள்ளத்துக் கவலை மிகுதியாகத் தோழிக்குத் தன்னுடைய வருத்தத்தை எடுத்துச் சொல்லுகின்றாள். 2. தலைமகன் தான் பிரியப்போகுஞ் செய்தியைத் தோழிக்குச் சொல்லுகின்றான். அதனைக் கேட்ட அவள் தலைமகளிடத்தே சென்று செய்தியை இவ்வாறு கூறுகின்றாள்.)

         இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
         வலைவலந் தனைய ஆகப், பலஉடன்
         சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்,
         துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன
         வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி, 5

         குயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி
         மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
         உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
         வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே
         செல்ப என்ப தோழி! யாமே, 10

         பண்பில் கோவலர் தாய்பிரிந்து யாத்த
         நெஞ்சமர் குழவிபோல, நொந்து நொந்து,
         இன்னா மொழிதும் என்ப;
         என்மயங் கினர்கொல், நம் காத லோரே?

வேலமரங்கள் இலைகளை ஒழித்துப் பொலிவிழந்த உச்சியை உடையவையாகத் தோன்றும். அவற்றின்கண் வலியினைக் கட்டி வைத்திருப்பது போலச் சிலம்பி நூல்கள் பலவும் ஒருங்கே படர்ந்து விளங்கும். காடெல்லாம் தன் வளம் கெட்டும் கிடக்கும்.