பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/382

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 367


நெற்பயிர்கள் காண்பதற்கு இனிதாகச் சாய்ந்து கிடக்கின்றன. வண்டுகள் மரக்கிளைகளிலே அசைந்து கொண்டிருக்கின்ற அத்தகைய முன்பனிக்காலத்து நள்ளிரவிலே,

‘காயும் சினமுடைய வேந்தனின் பாசறைக் கண்ணே நெடுங்காலம் இருப்பவராயினர், நம் நோயின் தன்மையை அறியாத அறனற்றவரான நம் தலைவர். இந்த நம் நிலைமையினைப் போக்குவதற்கு அவர் வருவாரோ?’ என்று, அமையாது வருத்துகின்ற வாடை காற்றோடு, என் தனிமைத் துயரினை யானும் பொறாதவளா யிருக்கின்றேனே? (என்ன சொல்லியும் என் மனம் தெளிவுற்றிலதே. யாது செய்வேன்? என்றனள்)

என்று, பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: மங்குல் மாமழை - மிகவும்கடுமையான கார்காலத்து மேகங்கள். 2. துள்ளுப் பெயல் - கடுமையான பெருமழை. 3. துவலை - மென்துளிகள். 4. கையறு மகளிர் செயலற்று வருந்தியிருக்கும் மகளிர் 6 துய்த்தலை - பஞ்சினைப் போன்ற மென்மையான, 7. அந்தளிர் - அழகிய தளிர். 8. ஈருள் - ஈரல்.10. கதிர்வார்- கதிர் நீண்ட 15.ஆனாது எறிதரும் அமையாது வந்து வருத்தும்.16. நோனேன் - வருந்துவேன்.

விளக்கம்: நின்னைப் பிரிந்து வாழார்; வினை முடிந்ததுமே விரைய வருவார் எனத் தேறுதல் உரைக்கும் தோழிக்குக் குறித்த காலமும் பொய்த்தார்; அடுதத கூதிரும் முன்பனியும் வந்து கழிந்தது; இன்னமும் வருதற்கு அருள் அற்ற அவர் என்றுதான் வரப்போகிறாரோ? எனத் தலைவி, தன் ஆற்றாமை மிகுதியைச் சொல்லி வருந்துகின்றாள்.

மேற்கோள்: ‘முல்லையுள் முன்பணி வந்தது; நிலமும் கருவும் மயங்கிற்று என, இச்செய்யுளைத் திணை மயங்குறுதலும்’ என்னும் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் காட்டுவர்.

பாடபேதங்கள்: 2. பொழிந்த பின்றை. 8. இருவகிர் இருளின் 16. தனிமையினானே.

295. வந்து நலம் தருவார்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு: புல்லியின் வேங்கடமலைத் தொடரைப் பற்றிய செய்தி.