பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/395

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

அகநானூறு - மணிமிடை பவளம்



இவள் பெரிதும் கலங்கியவளாகத் தீங்குற்றனள் என்றால், அதனைத் தாங்கி அவளைப் பேணி நிற்காது, ஏதிலார் போல நீயும் பிரிந்து செல்வாயானால், அதனால் திடுமெனப் பிரிதொன்று நிகழ்வதனைக் (அவள் பிரிவாற்றாது இரந்துபடு தலைக்) கருதியும் யான் அச்சம் கொள்வேன். அதனால்,

நீயும் என் பேச்சைக் கேட்டு அருளுதலாகிய எண்ணம் கொண்டனையானால், தொலைவினின்றும் வரும் ஏதிலார் போல, 'எம்மோடு உறவில்லாதவனாகக் காட்டிக்கொண்டு, எதனையும் கருதாயாக, மிக்க ஆரவாரத்தையுடைய அழகிய எம்முடைய சிற்றுாரிடத்தே, நீயாக வருவதுபோல வந்து சேர்வாயாக வந்தால்,

எங்கள் சுற்றத்தார், விரைவிலே நின்னை எதிர்கொள்வர். நின் வருகைபற்றியும் மெல்லென வினவுவர். “பொழுதும் மயங்கிவிட்டது. நீர்த்துறையும் அலை மிகுதியாகி ஏறுதலால் செல்வதற்கு ஏற்றதன்று. அவ்விடத்தே கிடக்கும் சுறாமீன்களும் செல்வார்க்கு மிகவும் பகையாயிருப்பன. இரவும் வந்தது. இளைஞனே! நீ இவ்வேளையிற் செல்லுதல் வேண்டா எனக் குறையிரந்து, நின்னைத் தங்கிச் செல்லுமாறும் வேண்டுவர். அப்போது,

நின் ஏவலரும் குதிரைகளும் நீயும் அங்கே தங்கி, மிகுதியான இன்பத்தினை அடையுமாறு, எம் இல்லத்திலே நின்னை நல்ல விருந்தாக ஏற்றுப் பேணுதலையும் யாங்கள் செய்வோம்.

என்று, பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொன்னாள் என்க.

மேற்கோள்: “இதனுள், தான் பெரிது கலுழ்ந்து தீங்காயினள். எனவே, அக்குறிப்புத் தலைவன் போகாமல் தடுக்கவே கூறியதென உணர்ந்து தோழி கூறினாள்” என, ‘இருவகைக் குறிப் பிழைப்பாகிய விடத்தும் என்னும் சூத்திர உரையினும்,

‘வேளாண் பெருநெறி வேண்டியது' என, நாற்றமும் தோற்றமும் என்னுஞ் சூத்திர உரையினும் நச்சினார்க்கினியர் காட்டுவர்.

அகநானூறு மணிமிடை பவளமும்
புலியூர்க் கேசிகன் உரையும்
முற்றுப்பெற்றன
★★★★★