பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/438

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 423



பிட்டன் (143)

சேரர்களின் படைத் தலைவருள் ஒருவன். குதிரை மலைக்கு உரியவன். 'அகம் -77ல் மதுரை மருதன் இளநாகனார் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர். ஆலம்பேரிச் சாத்தனார் பாடிய இச் செய்யுள், 'வசையில் வெம்போர் வானவன் மறவன்’ எனவும், ‘நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும், பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன்’ எனவும் இவனைப் போற்றுகின்றது.

பிண்டன் (152)

இவனும் சேரர் தளபதிகளுள் ஒருவன்; குறுநிலத் தலைவன். பாரத்துத் தலைவனான நன்னனோடு பெரும்படையுடன் சென்று இவன் முதற்கண் போரிட, இவன் படை நன்னனால் அழிக்கப் பெற்றதென்ற செய்தியைப் பரணரின் இந்தப்பாடல் கூறுகிறது. நன்னனை முடிவில் அழித்தவன் சேரமான் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆவான்.

புல்லி (209, 294)

இவனே கள்வர் கோமான் புல்லி எனவும், வேங்கடத்துப் புல்லி எனவும் குறிக்கப் பெறுபவன். வேங்கடமலைப் பகுதிக்குத் தலைவனாக இருந்தவன்; பாண்டியரின் நட்பினன். அவர் படைக்கு யானைகளை வழங்கியவன். கல்லாடனார், மாமூலனார் ஆகியோராற் பாடப்பெற்றவன். 'மாஅல் யானை மறப்போர்ப்புல்லி' (அகம் 209) எனக் கல்லாடனாரும், ‘புடையல் அம் கழற்கால் புல்லி' (295) என மாமூலனாரும் இவனைப் போற்றுகின்றனர்.

பேகன் (262)

வையாவிக் கோப்பெரும் பேகன் எனப்படும். மயிலுக்குப் போர்வை நல்கிய புகழுடையோன் இவனேயாவன். இவனைப் பாடியோர் பலர். இவன், மனைவியாம் கண்ணகியை மறந்து முல்லைவேலி நல்லூர்க் கண் காதீலியோடு வாழப், பெரும் புலவர் பலர் இவனுக்கு அறவுரை கூறிய செய்திகளைப் புறநானூற்றுள் காணலாம். இச்செய்யுளின்கண், 'வண்டுபடு நறவின் வண்மகிழ்ப் பேகன்’ எனப் பரணர் இவனைப் பற்றிக் கூறுகின்றனர்.


பொலம்பூண் கிள்ளி (205)

சோழ மன்னர்களுள் ஒருவனான இவன் கோசர்களுடைய ஆற்றல் மிகுந்த பெரும்படையினை அழித்து, அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொண்டவன். இவனுடைய கோநகர் காவிரிப்பூம் பட்டினமாகும். இந்தப் பாடலுள் இவனைக்