பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




பதிப்புரை


எட்டுத்தொகை நூல்களுள் அகநூலாக அமையும் பெருமை உடையது அகநானூறு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளில் நானூறு பாக்களைக் கொண்டிருக்கிறது. நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறு களிற்றியானை நிரை (பாடல்கள் 1- 120) மணிமிடை பவளம் (பாடல்கள் 121 - 300) நித்திலக் கோவை (பாடல்கள் 301 - 400) என்னும் முப்பிரிவுகளாக அமைந்துள்ளன. வில்லவதரையன் பாடலும் இதனை உணர்த்தும்.

ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய வாகி அடிநிமிர்ந் தொழுகிய
இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
நானு றெடுத்து நூனவிற் புலவர்
களித்த மும்மதக் களிற்றியா னைநிரை
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறமாக
முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை.

121 முதல் 300 வரை உள்ள பாடல்கள் மணியும் பவளமும் கலந்தது போன்று அழகுடையன. மணிமிடை பவளத்திற்கு புலியூர்க் கேசிகன் எளிமையான உரை வழங்கியுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் தமிழரின் அகவாழ்வு நெறிகளைக் கூறும் அகநானூறு இலக்கியத்தைக் கற்று இன்புறுவோம்.

பதிப்பகத்தார்