பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அகநானூறு - மணிமிடை பவளம்



இரங்கத் தக்கவளாகிய என் மகள், அத்தகைய அரிய சுரநெறியிலே, அவள் காதலனுடன் கடந்துசென்றனள் என்பார்கள்.

யானைக் குரலுடைய பறவைகளுடன் சேர்ந்து களிப்புக் கொண்ட மயில்களும் ஆடிக்கொண்டிருப்பதும், ஓயாத முழ வொலியினை உடையதும், செல்வத்தைத் துய்த்து இயலுகின்ற இல்வாழ்க்கை அமைதியினை உடையதும்ஆகிய, நெல்வளம் மிகுதியாக உடைய தன் தந்தையின் அகற்சியையுடைய மாளிகையிலே, எடுத்துவைக்கும் தன் காலடியானது சிறிதே புரண்டாலும், அதற்கே வருந்துபவள் அவள். அவளுடைய, ஐம் பகுதிட்பட்ட சிறிய பலவாகிய கூந்தலைச் சூடியிருந்த மாலையுடன் சேர்த்துப்பிடித்துக், கொஞ்சமும் அருளில்லாது அடிக்குங்கோல் சிதையும் வரையும் முதுகிலே அடிக்கவும், ‘முதுகு எனக்கு உரியது’ என்றும் சொல்லாளாய், அன்று அசையாது நின்றாள்.

‘குறுக்கைப் பறந்தலையிலே, திதியனது பழமைபொருந்தி யதும், நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடையது மான, புன்னையின் பெரிய முதல் துண்டாகப் பண்ணிய அன்னி போல, அமர்த்த கண்களையுடைய என் அம்மையை அப்படி அடித்து வருத்திய என் கையும் பெரிய துன்பத்தை அடைவதாக!

என்று, மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. வேர் முழுது - வேறாம் மரம் முழுமையும் எனப் பொருள்படும். புகழ் கால் - துளையையுடைய அடி மரம். 3.ஒதி-ஓந்தி.4.பையுள்-துன்பம்.7.வாள் வரி-புலி வாள் போன்ற கோடுகளை உடையது. 9. உரும் இடி முதல் - வேரோடும், 14.நவை.துன்பம்16.துய்த்தியல்வாழ்க்கை-இல்வாழ்க்கை.17:கூழ் நெல்வளம். 20. எறி - கோல் - அடிக்குங்கோல், 22 அஞ்ஞை - அம்மை; மகளைக் குறிக்கும்.

விளக்கம் : அடி புரள்வதற்கே வருத்தமுறும் மகள், கூறுதலைப் பற்றிக்கொண்டு அடிக்குங் கோலும் சிதையுமாறு அடித்தாலும், தான் உடன்போக்கிலே செல்லவிருப்பதை மனத்துட்கொண்டு வாளாவிருந்தனள், அதனைப் பின்னரே செவிலித்தாய் உணர்கிறாள். துய்த்தியல் வாழ்க்கையை உடைய தந்தையாயிருந்தும், அவள் விரும்பியவாறே துய்த்தின்புற மாறுபாடு சொன்னதால்தான், அவள் வெளியேறினாள் என நினைப்பதும் இதனாற் கருதுக.