பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 99


கிளைஞன் அல்லனோ - நெஞ்சே - தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை

மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின்
5


ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அறுங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை

கெடாஅ நல்இசைத் தென்னன் தொடாஅ
10


நீர்இழி மருங்கில் கல்லளைக் கரந்தஅவ்
வரையர மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே!

நெஞ்சமே!

மண்ணினால் ஆகிய புற்றினை உடையதான காட்டரணின் இடத்தினை உடைத்துத் திறத்தலோடு, அவற்றுள் விளங்கும் பகைவரது பசுமந்தைகளைக் கவர்ந்து கொண்டும் செல்லுகின்ற. கள்வர்களின் முதல்வனாக மூதூரினிடத்தே விளங்குபவனும், ஏவலாளரான இளையர்கள் பலருக்கும் தலைவனாகவும், தன்னொடும் ஒத்துப்போகாதவரின் அரியசிற்றரண்களை இழித்த வலிமை உடையவனாகவும் பருந்துக் கூட்டங்கள் வட்டமிட்டு வருமாறு பல போர்களிலே பகைவரைக் கொன்று வெற்றிபெற்றவனாகவும் இடியுடனும் மாறுபாடு கொள்ளும் பெரிதான கையினை உடையவனாகவும், என்றும் கெடாத நல்ல புகழினை உடையவனாகவும் விளங்குபவன் தென்னவனாகிய பாண்டியன் ஆவான்.

தென்திசைக் கண்ணதாகிய, வெல்லும் போராற்றலுடைய அத்தகைய பாண்டியனது நல்ல நாட்டினிடத்தே உள்ளதாகிய, தோண்டப்படாத நீரான அருவிகள் வீழுகின்ற மலைப்பகுதியில், அதனைச் சார்ந்துள்ள மலைக்குகையிலே மறைந்துள்ள வரையர மகளிரைப்போல, அடைதற்கு அரியவளாக இருப்பவள், அழகிய வரிகளையுடைய அல்குலினைக் கொண்டவளான நம் தலைவியும் ஆவள்.

அவளை யாம் அணையப் பெறாதவிடத்து, நின்னை யாம் ஒறுத்தேமாயினும், நீ அவளை நினைதலைக் கைவிடுவாய் அல்லை! 'அவள்பாற் செல்லேல்’ என நின்னை நிறுத்தினேமாயினும், நீ எம்மிடத்துக் கூடிநிற்பாயும் அல்லை! நினக்கு யான் உறவுடையேன் அல்லனோ? (அதனைக் கருதியாயினும்) ஒன்றிக்கலந்த நட்பினரைப் போலவேனும் எனக்குத் துணை நின்று நீ இதுகாலை

உதவுவாயாக!