பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 103


- கழுதை முதுகின் இருபுறமுமாகத் தூக்கியுள்ள நிறைவான பொருட் பொதிகள். அசாஅக் களைந்த - தளர்வினைப் போக்கிய 15. ஆள்வினை - முயற்சி. 18. துவர்வாய் - பவளம் போன்ற வாய்; செவ்வாய் எனவும் பாடம். 19. பிரிந்த - பிரிந்துவந்த; பெயர்ந்த எனவும் பாடம்.

விளக்கம்: 'வீழ்ந்தாரின் பெயரும் பீடும் பொறித்த நடுகல்லிலே, வண்டிச்சக்கரத்துப் பூண் உராய்தலால், அதன் கண் செதுக்கிய எழுத்துக்கள் சிதைந்து போக, அது வழிச் செல்வார்க்கு வேறுபொருள்பட விளங்கும் காடு' என்றனர். இதனால் காட்டுவழியின் கொடுமை புலப்படும். 'வேறு பயம் படுக்கும்’ என்பதற்கு, அந் நடுகல்லிற் கண்ட எழுத்துக்கள், வீழ்ந்தாரின் பெயரையும் பீட்டையும் உணர்த்துதலின்றி, வழியிடை நேரக்கூடும் கொடுமையினை உணர்த்துவதாக விளங்கும்' எனலும் பொருத்தமானதாகும்.

வணிகர்க்கு உயவுத்துணையாயிருந்த ஆள்வினையினைப் பற்றிக் கூறினான், அத்தகைய நிலையில் தொடர்பற்றோர்க்குத் துணையாக அமைந்த தான், தன் காதன் மனையாளுக்குத் துணையின்றித் தனித்து வாடவிட்டு வந்த நிலையினை நினைந்தவனாக என்க.

'கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண், சின் மொழிப் பொலிந்த துவர்வாய்ப் பன்மாண் பேதை' என்றதனை நன்கு சிந்திக்க வேண்டும். இது, அவளை அவன் தேற்றித் தெளிவித்துப் பிரியும் காலத்தே, அவள் நின்றிருந்த நிலையினை நினைந்ததும் ஆம். கள்ளுண்டு மகிழ்ந்தாரின் கண்கள் சிவப்புற்றுக் கலங்குதல்போலத், தன் காதலனின் பிரிவினுக்கு ஆற்றாது அவள் கண்கலங்க நின்றதனையும், பேச்சும் எழாதாளாகிச் சின்மொழி பயிற்றியதனையும் எண்ணியவனாக அவன் வருந்தினான் என்க.

344. நகைமுகம் பெறுவேம்!

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்; அம்மள்ளனார் எனவும் பாடம். திணை: முல்லை. துறை: வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகர்க்குச் சொல்லியது.

(அன்புறு தலைவியைப் பிரிந்தவனாக வேற்று நாட்டிற்குப் பணிமேற்கொண்டு சென்றிருந்தான் தலைவன் ஒருவன். அவன் சென்ற வினை முடியும்வரையும் அவனுள்ளம் அதன் மேற் செல்லுதலால், அவள் பிரிவு அவனைப் பெரிதும் வாட்டவில்லை. ஆனால், வினை நிறைவுற்றதும், அவன் நினைவெல்லாம்