பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 111


மேற்கோள்: இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டி, 'பரத்தையர் மனைக்கண் தங்கிவந்து அகநகர் புகுதாது புறத்திருந்த தலைவனை, மிகக் கழறிச் சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின்கண் ஊடல் நீங்கும் தன்மை உளதாக்கிக் கூட்டும்’ என்று உரைத்துப், 'பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த' எனும் கற்பியற் சூத்திரத்துப், 'பிழைத்து வந்திருந்த கிழவனை நோக்கி, இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்' என்னும் பகுதிக்கண் நச்சினர்க்கினியர் எடுத்துக்காட்டுவர்.

347. செய்வினை வாய்ப்பதாக!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: சேரலாதன் மேற்கடலிடத்தே பகைவரை வென்று அவரது காவன் மரமாகிய கடம்பினை அறுத்து முரசு இயற்றினான் என்பது.

(தலைமகன் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தனன், தலைவியின் அழகு கெடப் பசலையும் படர்ந்து வருத்துதலாயிற்று. அதனால், ஊரிலும் அம்பலும் அலரும் மிகுதியாயிற்று. அப்போது, தோழி அவளைத் தேற்றுவாளாகத் தலைமகனைப்பற்றிப் பழியுரை சில கூற, அதனைப் பொறுக்கமாட்டாத தலைவி, இங்ஙனம் தோழிக்குக் கூறுகின்றனள். கற்பின் தகைமையினை நன்கு புலப்படுத்துவது இச்செய்யுள் ஆகும்)

          தோளும் தொல்கவின் தொலைய நாளும்
          நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
          சால்பெருந் தானைச் சேர லாதன்
          மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
          பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன 5

          கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
          அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
          சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
          வாய்க்கதில் - வாழி தோழி - வாயாது
          மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து 10

          ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் குவவுஅடி
          வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
          கன்றொழித்து ஓடிய புன்தலை மடப்பிடி
          கைதலை வைத்த மையல் விதுப்பொடு
          கெடுமகப் பெண்டிரின் தேரும் 15

          நெடுமர மருங்கின் மலைஇறந்தோரே!