பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அகநானூறு - நித்திலக் கோவை


யுடையது என்பதாம். 2.பல்கிளை-தலைவன் பல சுற்றங்களுக்கும் தலைவனாக உள்ள கல்லாக் கடுவன் - இளமையுள்ளகடுவனும் ஆம். 4. கோடியர் - கூத்தர். 5 விறலி ஆடு மகள். 6. முழவன் - முழவு இயம்புவோன். அகப்படத் தழீஇ பொருந்தத் தழுவிக்கொண்டு. இன்றுணைப் பயிரும் இனிதான தன் துணையினை அழைக்கும். 9. கெடு நாமொழியலன் - நாவாற் கேடானவற்றைக் கூறுவானல்லன். 10. வல்லகூறி வலியுறுத்திக் கூறி, சிறப்பித்துக் கூறியும் ஆம் 11. காணில் - ஆராய்ந்தால், 13. நயவருபனுவல் - இனிமை வருதலையுடைய நூல் இசைநூல். 14. உரை சால் புகழ்மிக்க. 15. எண்ணுமுறை நிறுத்த அலகிடுதலின் முறைக்குப் பொருந்த நிலை பொறுத்திய எனலும் ஆம் 16. புதுவது புனைந்த திறம்-புதுமைதோன்ற அவன் கைவண்ணங் காட்டிய திறமை. 17 வதுவை- நாளினும் தலைநாட்களவிற் புணர்ச்சி பெற்ற அந்நாளினும் காட்டில், மணநாளினும்.

விளக்கம்: கடுவன் பலாப்பழத்தைத் தழுவிக்கொண்டதாக, அருவியொலி இசைக்க ஆடும் மயிலினைக்கொண்ட பாறை மருங்கிலே, விறலி பின்றை விளங்கும் முழவனைப் போலத் தோற்றியது என்க. அது, அதனைத் தான் உண்ண முனையாது இன்துணைப் பயிர்தல், அதன் காதற்பெருக்கினை உணர்த்துவ தாம். பல்கிளைத் தலைவனாகிய அது, அக் கிளைகளை எல்லாம் அழையாது, தன் இன்துணையினை அழைத்தது, அவற்றினும் துணையின்பாற்கொண்ட அன்பின் மிகுதிபற்றியாம். அத்தகைய தன்மையினையுடைய நாடன் எனவே, தலைவனும் தலைவிபாற் பேரன்பும் பெருங்காதலும் உடையவன் என்பதும் கூறினர்.

'குடி நன்கு உடையவன்' என்றது, நற்குடிப் பிறத்தலினாலே ஒருவன் பால் படிக்கின்ற நல்லியல்புகள் பலவற்றையும் அவனும் உடையன் என்றதாம். இதனால், குடிச்சிறப்பு அக்காலத்துப் பெரிதும் போற்றிக் கொள்ளப்பட்டதென்பதும் புலனாகும்.

கெடுநா மொழியலன் நாவாற் கேடாயின கூறுதல் இல்லாதவன் என்க. சொற்கள் பொய்ப்பட்டு அழியுமாறு பொய்ம்மை புகல்வான் அல்லன் எனவும் கூறலாம்.

'நல்லிசை நிறுத்த நயவரு பனுவல் தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்' என வருவன, அந் நாளில் இசைத் துறை நுட்பங்களை வகுத்துக்கூறும் தமிழ் நூல்கள் தமிழகத்து நிரம்ப நிலவியதனை வலியுறுத்தும்.

உள்ளுறை: பல்கிளைத் தலைவனாகிய கடுவன் பலாப் பழத்தினை அகப்படுத்துத் தன் இனிய துணையைப் பயிரும் நாடன் என்றது, அங்ஙனமே தலைவனும் தன் காதலிபாற் பேரன்பு கொண்டவன் என்பதனை உணர்த்துவதாம்.