பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 127


கூந்தலையுடையவளும், புனையும் அணிகளை உடையவளுமான நம் தலைவியின் குணங்களை நினைவுகொண்டு மயங்குவாய் அல்லையோ? (மயங்காதிருக்கும் துணிவுண்டாயின் செல்க என்பது கருத்து)

சொற்பொருள்: 1. ஆள்வினை - முயற்சி. 6. செந்நிலை - செவ்வியநிலை: மூங்கில் நேராக உயர்ந்து நின்ற தன்மையைக் குறித்தது. 8. எரிவாய்க் கோடை - வெப்பமிக்க கோடை9. களர் - களர்நிலம் நீறு துகள், புழுதி சுழல சுழன்று வீச காற்றுச் சுழித்தடித்தது என்றது இது.10. திருகிய-முறுகிய. 11. உயங்குநடை வருந்தி தளர்ந்த நடை வயங்கு பொறி - விளங்கும் புள்ளிகள். 15. இயவு காட்டுவழி இறந்து கடந்து.

விளக்கம்: 'நாளும் கனவுக் கழிந்தனைய வாகி’ என்றது, நனவிலே பிரிதலால் உளதாம் பெருந்துயரத்தினைக் கருதாது, பொருள்தேடி வருதலையும், அதனாற் செய்யலாம் வாழ்வு நலன்களையும் பற்றிய கனவுகளிலே ஈடுபட்டிருக்கின்ற தன் உள்ளத்துநிலையினைக் குறித்தாம். அதனைக் கைவிட்டு கனவின் நிகழ்ச்சிகளைக் கருதக் கூறுபவன் நாளது செலவும் மூப்பினது வரவும், அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும், இந்நிலை அறியாய்' என்றனன். பொருளார்வத்தைக் கனவுக்கு ஒப்பிட்டு, வாழ்வின் மெய்ம்மையை நனவுக்கு இணையாகக் கூறுகின்ற நயத்தினை உணர்க. 'துய்த்தற்கு உரித்தான இளமைப் பருவத்தே, அரிதாகப் பெறுகின்ற சிறப்பினையுடைய காமத்தின் இயற்கையினைக் கருதாமலும், நாட்கள் அதனைப் பெறாது கழிதலை எண்ணாமலும், மூப்பின் வருகையால் அதனைத் துய்த்தற்கு ஏலாதென்பதை உணராமலும் மயங்குகின்றனை' என்பவன், பொருளார்வக் கனவிலே மூழ்கியிருக்கும் நீ இவற்றை அறியமாட்டாய் என்பானாக, 'இந்நிலை அறியாய்' என்கின்றனன். பிரிவினாலே வந்துறும் கொடுமையைக் குறிப்பதுபோலச், 'செந்நிலை அமையோடு அம்கழை தீண்டிக் கல்லென ஞெமையிலை உதிர்த்த எரிவாய்க் கோடை' எனக், கோடையால் அவை கழன்று அழிதலைக் கூறினன். தன்னைப் பொருளார்வம் அலைக்கத் தன் பிரிவுச் செயலால் தன் தலைவியின் அழகுநலன் அழிய நேரும் என்பது கருத்தாகும்.

'பிணை தழீஇய எழிற்கலை' அறுகயம் நோக்கித் தழைமறந்து, உண்ணீர் இன்மையின் ஒல்குவன தளர' என்றது, காட்டின் கடுமையைக் கூறியதுடன், அவ்விடத்து துன்பத்தின் கண்ணும் பிரியாது துணையைப் பேணும் கலையின் காதற் செவ்வியினையும் கூறியதாம். அது, தானும் அவ்வாறே தலைவியைப் பேணும் காதலன்பு கொண்டவன் என்றற்கு.