பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அகநானூறு - நித்திலக் கோவை


பிரம்பு. 2. வான் முகை - வெண்மையான பூவரும்புகள், 3. பிணவு - புலியின் பெண். உயக்கம் - வருத்தம். 4. தொலைச்சி - கொன்று 5. வியல் அறை - அகன்ற பாறையிடங்கள். முணங்கு நிமிர்தல் - மூரி நிமிர்தல்; உழைத்துக் களைத்தபின் உடலை உதறிக் களைப்பாற்றும் தன்மை. 6. புலவுப் புலி - புலால் நாற்றத்தைக் கொண்ட புலி, 8. கை தொடுஉப் பெயரும் - ஒன்றையொன்று கைகோர்த்தவாறு செல்லும், கை கொடுஉப் பெயரும் எனவும் பாடம், 9. பலவின் தொழுதி - பலாமரத்தின் செறிவு உம்பற் பெருங்காடு - ஒரு காட்டின் பெயர். 12 நல்கு வர - அருள் உண்டாகுதலைப் பொருந்த நல்குவர் எனவும் பாடம்; அருள் செய்வர் என்பது பொருள்.13. தீ நீர்-இனிய நீர், 14 அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் பூக்கள் - இலையினைக் கடந்தவையாக நீர் மட்டத்திற்கு மேலே உயர்ந்து எழுந்து குளிர் மணத்துடன் மலர்ந்துள்ள தன்மையைக் குறித்தது. 15. கால் - காற்று. துயல்வருதல் - அசைந்தாடுதல் 16. அமர்த்த நோக்கு - அமரிய பார்வை.

விளக்கம்: உம்பற் பெருங்காட்டின் தன்மையினைக் கூறுவதனை நன்கு சிந்திக்கவும். பெண்புலியின் பசிபோக்க விரும்பிய ஆண்புலி, யானையைக் கொன்று, அதன் ஊனைப் பாறையிடமெல்லாம் சிவக்க இழுத்துச் சென்று, தன் துணைக்கு ஊட்டியபின் மூரித்து நிமிர்ந்து புரண்டதால் புற்கள் சாய்ந்து கிடக்கின்ற நெறி என்றனர். கொடுமைக் குணம் உடைய தாயினும், அந்த ஆண்புலிக்கும் தன் துணையின்பால் அமைந்துள்ள அன்பின் மிகுதி இதனாற் கூறப் பெற்றது. அங்ஙனமாக, அருளாளராகிய நம் காதலர் நம்மை வருந்தி வாடவிட்டு அமைவாரோ என்பதும் உணர்த்தினள் என்க. 'பெருங்களிற்று இன நிரையும் அச்சத்தால் கைதொடுஉப் பெயரும்’ எனவே, வழியிடையின் ஏதத்து மிகுதியும் கூறப்பட்டது. அதனைக் கடந்துசென்றவர் எனவே, அவனுடைய ஆண்மை மிகுதியும் உரைத்தனள்.

கண்ணிற்கு மிகுபெயல் நிலைஇய தீ நீர்ப் பொய்கை. அடையிறந் தவிழ்ந்த நீலம் காலொடு துயல்வந்த நிலை உவமை கூறப் பெற்றது. இது, தலைவியின் கண்கலங்கி நின்ற வருத்தத்தின் மிகுதியை உணர்த்துவதாகும்.

358. எதனால் என்பேன்?

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்; மதுரை மருதங்கண்ணனார் பாடியது எனவும் பாடம் திணை: குறிஞ்சி. துறை: பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.