பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 141


என்க. களிற்றின் அந்தத் தேட்டம் தலைவனின் உள்ளத்தும் தலைவியின் நினைவை எழுப்பும் என்றனள்.

வரகுப் பயிரினை அறுத்தபின்னர், அதன் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்துவது இன்றும் நம் நாட்டின் மரபாகும். இந்த மரபு பழையதாகவே வருகின்ற பயிர்முறை என்பதனைக், 'கான்சுடு குரூஉப்புகை' என்ற வாசகம் நன்கு உணர்த்தும்.

'கான்சுடு குரூஉப்புகை அருவித் துவலையொடு மயங்கும்’ என்றதனாலும், 'யானை மழைமாறு முழங்கும்' என்றதனாலும், தலைவன் திருப்பி வருதற்கான கார்காலமும் தொடங்கிற்று என்பதனை உணர்த்தினள்.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது' என்பதினும், 'பிரிவிடை ஆற்றுவாளாய தோழிக்குத் தன் ஆற்றாமையைத் தலைவி சொல்லுவதாகக் கொள்ளுதல், இச் செய்யுளின் அமைதிக்கு மிகவும் பொருத்தமாக விளங்கும். இதனை நன்கு ஆராய்ந்து கொள்ளுக.

360. பெயரின் வருந்துவள்!

பாடியவர்: மதுரைக் கண்ணத்தனார். திணை: நெய்தல். துறை: பகற்குறிவந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்த்தது. சிறப்பு: கடற்கரைக்கண் அந்திவானக் காட்சி இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல இருந்ததென்பது.

(கடற்கரைப் பகுதித் தலைமகன் ஒருவன், அப்பகுதித் தலைவி ஒருத்தியைக் கண்டு காதலித்துப், பகற்குறியிடத்தே அவளுடன் கூடிக், களவு வாழ்வினனாக இன்புற்று வருகின்றான். மாலையில். அவன் தேரேறித் தன்னூர்க்குச் செல்லுவதும் வழக்கமாக அமைந்திருந்தது. அந்தக் களவு உறவினை நீட்டிக்க விரும்பாது, அவன் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணந்து கொள்வதிலே செலுத்த விரும்புகின்றாள், அந்தத் தலைவியின் தோழி. ஒரு நாள் மாலை, அவன் ஊருக்குச் செல்லுவதற்குப் புறப்படும்போது, அவனிடம், இரவில் வருமாறு சொல்பவளாக, அதன் இயலாமையையும் அவனுக்கு நுட்பமாகப் புலப்படுத்துகின்றாள் அவள்)

பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பி
ஒருகால் ஊர்திப் பருதிஅம் செல்வன்
குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
தண்சேற்று அடைஇய கணைக்கால் நெய்தல்

நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப
5