பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அகநானூறு -நித்திலக் கோவை


விளைவயலின் நிலையினைக் காட்டினர். பயன் பெறுவதற்கு உரிய வயலிடம் வறட்சியால் பயனற்றுக் கிடப்பது போலப் பொலிவுடன் இன்புறுதற்கான தலைவி, தலைவனது பிரிவினால் அதனை இழந்து இருக்கின்றனள் என்று அவளது அவலநிலையினைக் குறித்தனர். மிகச் சிறிதுபொழுதும் மறந்திருத்தல் இயலாத நிலையினள் என்பதனைச் 'சிறுநனி' என்ற சொற்களால் உணர்த்தினர்.

நல்குநர் - கொடுப்போர்; ஊர்களிலே நடக்கும் ஊர்ப் பொது நிகழ்ச்சிகளான கூத்து முதலியவற்றிற்கு உரிய கூலியைக் கொடுத்தனுப்பும் பொறுப்பு நிலையினர்.

ஆரையினைத் 'தொத்தளிப்பாய்' எனக் கொண்டும் பொருள் உரைப்பார்கள். ஆயின், ஆரைக்கால்கள் என்று இந்நாளினும் வழங்கும் வழக்கு யாம் குறித்தவாறே இருத்தலை அறிக. கூத்தரின் கவலையற்ற வாழ்க்கை நிலையினை நன்கு எடுத்துக் காட்டுபவர், 'நாடோடி வாழ்வினரெனினும் நலிதலற்ற நல்வாழ்வினர்’ எனக் காட்டுகின்றார். 'எமது’ எனச் சொல்லுதற்கு ஒர் ஊரும் அற்றவர்தாம்; எனினும் ஊறற்ற வாழ்வினர் என்பதன் செறிவை உணர்க. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பரந்த பொதுவியல் உள்ளப்போக்கு உடையர் அவர் எனலாம்.

புன்றலை மன்றம். பிரிந்திருக்கும் காதலிக்கு நல்லதொரு உவமானமாகியது. "என்னைப் பொலிவுறச் செய்து என்னைக் கூடியிருக்கும் அவருடனே அமைந்த எம் வாழ்வைக் கண்டு பலரும் இன்புறச் செய்யும் கூத்தர் அவர். அன்று அவருடன் கூடியிருந்தபோது நீயும் என்னைக் கண்டு மகிழ்ந்தனையாகப் பாராட்டினாய், இன்று அவர் செல்லக், கூத்தர் கூத்தாடிப் போன பிற்றை நாளிலே விளங்கும் மன்றத்தின் பொலிவிழந்த நிலையிலே நானும் ஆகியிருக்கின்றேன். அது மூதூர்க்கு இன்னாதாயிருப்பதுபோல நீயும் என் நிலைக்குத் துன்புறு கின்றாய்.” என்று, தன் அவல நிலையினைத் தலைவி விளக்கு கின்றாள் தன்னால் அவனை மறக்க முடியாது என்பவள், மறத்தல் கூடுமோ?' என்றனள்,தும்பு-துளைக் கருவிகள், சில்லரி - சிலவாகிய அரித்தெழும் ஒசையினையுடைய வாச்சியம்.

302. அறன் இல்லாத தாய்!

பாடியவர் : மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். திணை : குறிஞ்சி. துறை : பகலிலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.