பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 149


சேவல் அடைந்து, அவ்விடத்துச் செறிந்ததனை உண்ணுதற் பொருட்டாகத், தன் கிளையினைத் தருகிற்கும் தெளிந்த கூப்பீட்டொலியினைச் செய்யும். இன்னாமையினை உடைய, இத்தகைய கொடிய சுரத்தினைக் கடந்து சென்றவர் நம் தலைவர்.

தாம் செய்யக் கருதிச் சென்ற, செய்தற்குரிய வினையிடத்தே வெற்றியுடையவர் ஆகி, கரிய அழகிய இணையொத்த நீலமலர் மையுண்டாற் போன்ற நின் கண்களின், மான்பிணையினை யொத்த அழகிய பார்வையானது பெரிதும் கவின் கொள்ளுமாறு, இவ்விடத்தே விருப்பமுடன் வந்து சேர்ந்தனர்.

ஆதலின்,

வரிசையாகச் செல்லுதலையுடைய குதிரைகளை விரைவுடனே செலுத்தி, அகன்ற பெரிய வானத்தே பகலும் கழியுமாறு சென்று, மழுங்கிய ஞாயிற்று மண்டியலமானது பெரிய மலையிடத்தே சென்று மறைந்தடர்ப, புனைந்த அணியினை உடையவளான நீயும், பொழுதுபோகிய காலத்து மலரினைப்போல வாட்டமுற்று, நின் பள்ளியினை அணைந்தவளாக, இத்தன்மையினை உடைய ஆகாதே இருப்பாயாக.

சொற்பொருள்: 1. நிறைசெலல் - வரிசையுறச் செல்லுதல், எழு குதிரைகள் பூட்டிய தேராதலின், அவை அனைத்தும் ஒரு சீரான வேகத்துடனே செல்லும் தன்மையினை இது குறிக்கும். இவுளி குதிரை. கடைஇ-செலுத்தி.3 சுடர்மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம்.4.பொழுது கழிமலரின்-பொழுது கழிந்த மலரினைப் போல, 6. அணை பள்ளி - அணைந்து பொருந்தியிருந்து. கனை - திரட்சியுற்ற, 6. புகரில் -வடுவற்ற 10. கொலை வெம் கொள்கை - கொலை செய்தலாகிய வெவ்விய கோட்பாடு. 1. நிறம் - மார்பு. 12. எஃகு - வேல். விழுப்புண் - சிறந்த புண் புண், மார்பிடத்து ஆதலின், விழுப்புண் என்றனர். 14. கெழு முடை - பொருந்திய ஊன். 16. வினை வலத்தர் ஆகி - வினையின்கண் வென்றியுடையவர் ஆகி.

விளக்கம்: காலையில் மலர்ந்து மாலையிற் பொழுது சாயவும் வாடிச் சோர்ந்து போகும் மலரினைப்போலப், பிரிந்தவர்களுக்குக் கொடியதான மாலையின் வரவினால், தலைவியும் வாட்டமுற்றவளாயினள் என்க. ஆசிரியர், பொன் செய் கொல்லர்’ என்பதற்கேற்ப, உதிர்ந்து கிடக்கும் நெல்லிக் காய்களின் தோற்றத்தினை, 'பொலம்செய் காசின் பொற்ப’ என்று கூறுதலைக் காண்க. 'கண்நோக்கம் கவின் கொள்ள அவர் எய்த வந்தனர்' என்றதால், தலைவி கண்கலங்கி வாடியிருந்ததும் பெறப்படும்.