பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அகநானூறு - நித்திலக் கோவை


விளக்கம்: தன் மகள் தன் காதலனுடன் உடன்போக்கிற் சென்றுவிட்டதற்கு வருந்துபவள், 'கிள்ளையும் தீம்பால் உண்ணா: மகளிர் ஆயமும் அயரா; தாழியும் மலர் அணியா; சுவர்ப்பாவையும் பலியெனப் பெறாஅ' என, அவள் பிரிவினால் அவையும் துயருற்று வாடிய நிலையினைக் கூறுகின்றனள். இது, 'தலைமகள் தான் பெரிதும் மனம் விரும்பிப் பேணிய அவற்றையும் மறந்து சென்றனள்’ என, அவளது காதல் மிகுதியை நினைந்து வருந்தியதாம். “நின் ஒலிகுரல் மண்ணல் என்றதற்கு, எற்புலந்து அழிந்தனளாகிக் கொடியோள் முன்னியது உணரேன்” என்றது, கூந்தலின் ஒப்பனையை என்றும் விரும்பும் தலைவி, அன்று அதற்காக என்னைப் புலந்து அழிந்த அந்தச்செயலையும்,யான் அவள் பிரிந்துபோவதற்கான நினைவினாற் செய்தது என உணரமறந்தேனே எனத் தன்னை நொந்து கொண்டதாம்.

‘நிதியுடைய நன்னகர்ப் புதுவது புனைந்து தமர்மணன் அயரவும் ஒல்லாள்' என்றது, தமர் தரவிசைந்த இளைஞனை மணப்பதற்கு அவள் இசையாது, அறத்தொடு நின்ற செவ்வியைக் குறித்ததாம். திருமணத்தன்று, புதுவது புனைந்திடுகின்ற வழக்கம் அன்றும் உடைமையும், இதனாற் பெறப்படும்.

மணி அணி பலகை - கேடயம்; தோலாற் செய்து கொள்வதைக் கிடுகு என உரைப்பர். தலைவனிடம் உள்ளவை, ‘மணியணி பலகை,மாக்காழ் நெடுவேல்,துணிவுடை உள்ளம், துதைந்த முன்பு' ஆகியவையே என்க. அவளுடைய செல்வத் தகுதிபற்றிக் 'கடலந்தானைக் கைவண் சோழர் கெடலரு நல்லிசை உறந்தை அன்ன நிதியுடை நன்னகர்’ என்றனள். அவளைக் காதலித்தவனின் தகுதியைக் கருதுவாள், ‘நல்கூர் பெண்டின்புல்வேய்குரம்பை, ஒர் ஆயாத்த ஒரு துண் முன்றில்’ என்றனள். மேலும், அவன் தலைவியைத் தன் மனைக்குக் கொண்டுசென்று மணந்துகொள்வானாதலால், அவனுடைய தாயைக் கருதி, இவ்வாறு கூறியதும் ஆகும்.

370. ஆடுமகள் போலப் பெயர்தல்!

பாடியவர்: அம்மூவனார். திணை: நெய்தல். துறை: பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

(நெய்தல் நிலத்தைச் சார்ந்த தலைவன் ஒருவனும், தலைவி ஒருத்தியும், தம்முட் கலந்த காதல் அன்பினர் ஆயினர். பகற்போதிற் கானற் சோலைக்கண் களவிலேகூடி இன்புற்றும்