பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 167



(தன்னுடைய உள்ளத்தே கலந்து நோய்செய்த நங்கை நல்லாளைக் கண்டு, கூடி இன்புற்று மகிழுகின்ற ஆர்வத் துடிதுடிப்புடனே நாடி வந்தான் காதலன் ஒருவன். அன்று, அவள் அவ்விடத்துக்கு யாது காரணத்தாலோ குறித்தபடி வராமற் போகவே, தன்னுர்க்கு மீண்டும் செல்கின்றனன் அவன். அவனுள்ளத்தே எழுந்த குமுறலைக் கூறுகின்ற முறையிலே அமைந்தது இந்தச் செய்யுள் ஆகும்.)

அருந்தெறன் மரபின் கடவுள் காப்பப்
பெருந்தேன் துங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கண்
வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்புநினைந்து 5

வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும்பணைத் தொடுத்த பலராடு ஊசல்
ஊர்ந்திழி கயிற்றின் செலவர வருந்தி
நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி
கடுமுனை அலைத்த கொடுவில் ஆடவர் 10

ஆடுகொள் பூசலின் பாடுசிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய்மணி இழந்த பாம்பின் நீநனி
தேம்பினை - வாழிஎன் நெஞ்சே! - வேந்தர்
கோண்தணி எயிலிற் காப்புச் சிறந்து

ஈண்டு அருங் குரையள்நம் அணங்கி யோளே

என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக.

பிறரால் தெறுதற்கு அரிய முறைமையினை உடைய கடவுளால் காத்துவரப்படுவது, பெரிய தேன் கூடுகள் தொங்கிக் கொண்டிருக்க விளங்குவது, நாடு முழுமையும் காண்டற்கு உரிய உயர்ச்சியும் அகற்சியும் உடையதாக அமைந்து இருப்பது, அச்சம் பொருந்திய பக்கமலைகளின் இடத்ததான பாழிப் பேரூர். அவ்விடத்தே

வேளிர் குடியினரெனப் பழையதாக வருகின்ற குடியினராகிய மக்கள். தம் நகரினின்றும் கொணர்ந்து மறைத்து வைத்த அரிய அணிகலன்களாகிய செல்வத்தினுங் காட்டில், பெறுதற்கு அருமை உடையவள் நம் காதலியாக அவள். அவளுடைய பண்பினை நினைந்து யாம் வருந்தினேம். எனினும், நீயோ அவளை மறத்தற்குப் பொருந்தாய் ஆயினை!