பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 171


நிலையினையே நினைந்திருக்கின்ற நம் காதலி, நம்முடைய இந்த நிலையினை உணரவே மாட்டாள்.

கரிய பலவாகிய கூந்தலையும் சிவந்த அணிகளையும் உடையவள் அவள்; செறிந்த இருளினையுடைய நள்ளிரவிலே அணையொடு பொருந்தியவளாகக் கொதிப்புற்று நம்மை வெறுக்கும் நெஞ்சத்துடனே மெல்லெனப் பெருமூச்செறிவாள். அழகிய பூவிதழ் போன்ற குளிர்ந்த அவள் கண்களில் நீர்மல்கத் தனிமை நோய் மிகுந்தவளாகத், தன் பெருத்த தோளினை நனைக்கின்ற, கண் கலங்கி வீழும் நீரினைத் தன் மெல்விரல் நகத்தால் வழித்துத் தெறித்தபடியுமிருப்பாள்.

வெற்றி வேலினையும் தலைமைகொண்ட யானையினையும் கொண்ட, அடும் போரினையுடைய வேந்தர்கள் பலரும் ஒருங்கே கூடி வளைத்துக் கொண்டதனாலே, முறிதல் பொருந்திய வாயிலையுடைய ஓர் அரணினுள்ளே அகப்பட்டுக் கலங்கியிருக்கும் மன்னன் ஒருவனைப்போல, அவள், தன் துயிலையும் அறவேகை விட்டனளோ? அவள் இரங்கத்தக்கவளே!

சொற்பொருள்: 1. முனை-போர்முனை. கவர்ந்து கொள்ளல் - அகப்படுத்துக் கொள்ளுதல், பீர் - பீர்க்கு 2. மரை - மரை என்னும் விலங்கு மானினத்தைச் சார்ந்தது. 3. பணைத்தாள் - பருத்த கால் அடி பரூஉப்புறம் - பெரிய முதுகுப்புறம், 4. காழ் - விட்டம் 6.புலம்பு - தனிமைத் துயரம் 8. மீளி உள்ளம் - திண்மை யுடைய உள்ளம் 11. கனைஇருள் - மிக்க இருள்; அதன் நடுநாள் - நள்ளிரவுவேளை. அணை - மெல்லணை. 12. வெய்துற்று - கொதிப்புற்று புலக்கும் - வெறுக்கும். 15. தெறியினன் - தெறித்தாளாக. 16 அண்ணல்யானை - தலைமையுடைய யானை. 17. முரவுவாய் ஞாயில் முறிந்த வாயிலையுடைய அரண்.

விளக்கம்: தாள் கையூட்டிய தனிநிலை இருக்கை - முழங்கால்களைக் கைகளாற் கட்டிக் கொண்டபடி இருக்கும் நிலைஇது. நடந்துவந்த களைப்பின் மிகுதியினையும் உணர்த்துவதாம். பிரிவினாலே தான் வருந்தும் வருத்தத்தை நினைப்பாளே அல்லாமல், நாம் இங்ங்ணம் வழியின் கொடுமையினாலே வாடியிருக்கும் தளர்ந்த நிலையினை அவள் நினைக்கமாட்டாள் என்கின்றனன்.

'பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப்பனி மெல்விரல் உகிரில் தெறியினள்’ என்பதனை நினைத்தால், அவளுடைய வருத்தத்தின் மிகுதி நன்கு புலனாகும்.