பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 175



ஆறலைத்தலை அல்லாது, பிறிதொரு வாழ்வு வகையினையும் கற்றறியாத இளைஞரை உடையது காடு. அவர்கள். அம்பு தொடுத்தலின் அமைதியினைக் காணும் பொருட்டாக, புதியராக அவ்வழியூடே வருபவர், தம்பால் அணிகலன் இல்லாதவராயினுங்கூட. அவர்களைக் கொன்று பறவைகளுக்கு உண்பிக்கும் கொடுமையினர். அத்தகையவராக, அவர் செருக்கித் திரிகின்ற கவர்த்த நெறிகளிலே, கூட்டமான நரிகள் தம் இனத்தோடும் கூடியவையாக, நிணத்தினை உண்டு கொண்டிருக்கும்.

போர்வினையிலே வெற்றிநீங்காத திண்ணிய தோற்களை உடையவனும், சோழர் பெருமானுமான, விளங்கும் புகழினை உலகிலே நிலைபெறுத்தியவன், இளம்பெருஞ் சென்னி என்பவன் ஆவான். அவன், தன் குடிமக்கட்குத் தான் செய்ய வேண்டிய கடமையாதலின், செம்பினை ஒத்த வலிய மதிலையுடைய பாழிப்பேரூரினை அழித்தான்; வம்பராய வடுகரது பசிய தலைகளைத் தறித்தான்; அவ்வமயம், அவனாற் கொல்லப் பெற்ற பகைவருடைய யானைகளின் கொம்பினைப் போல்.

குருதிக்கறை படிந்த வளமான நெருங்கிய விரல்களையுடைய காட்டுப் பருந்துச் சேவல் தங்கியிருப்பதான அடி திரண்ட யாமரத்தின் வெண்மையான கொம்புகள் தோன்றும்.

அச்சம் வருகின்ற தன்மையினையுடைய, வெப்பமிகுந்த அச்சுரநெறியினைக் கடந்து சென்ற நம் தலைவர் நோயிலராகி மீண்டும் வந்து சேர்தலை அறிவேனாயின், என் கண்களும் அழமாட்டாவே, தோழி!

சொற்பொருள்: 5. கலித்த - செருக்கித் திரிகின்ற, 6 கணநரி இனனொடு-கூட்டமான நரிகள் தம் இனத்தோடும்; இனமாவது, நரிகளின் கூட்டத்தை, 7 நெய்த்தோர் ஆடிய குருதி படிந்த, மல்லல் - நெருங்கிய, 9. வெண்திரள் - வெள்ளிய திரண்ட கொம்பு. 10. திணிதோள் - திண்மையான தோள்கள். 12. குடிக் கடன் - குடிகட்குச் செய்வதான கடன்; அல்லது தான் பிறந்த சோழர்குடிக்கு உரிய கடன் எனினும் ஆம்13. செம்பு உறழ் புரிசை - செம்பினைப் போன்ற மதில், மதிலின் உறுதியைக் குறித்தது. பாழி-பாழிப் பேரூர் நன்னனுக்கு உரியதாயிருந்தது.14. சவட்டி - தறித்து. 18. ஆழல அழமாட்டா ஆழமாட்டா எனினும் ஆம்: துயரத்தால் கண்கள் நீர் சொரிய விழிகள் உள்ளே போனதுபோலத் தோற்றும்; இதனை ஆழ்தல் எனக்கொண்டு அங்ஙனம் 'ஆழல' என்றனள் எனவும் கொள்ளலாம்.