பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 177


அம்தும்பு வள்ளை அழற்கொடி மயக்கி
வண்தோட்டு நெல்லின் வாங்குபீள் விரியத் 15

துய்த்தலை முடங்குஇறாத் தெறிக்கும் பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மாந்தை அன்னஎன் நலந்தந்து சென்மே!

மகிழ்நனே! செல்லல் வேண்டா!

பாகனால் பயிற்றப்பெற்று அவன் ஏவலுக்கு அடங்கி நடப்பதனைக் கல்லாத யானையானது, வெள்ளத்திலே நீர் விளையாடலைத் தானே கற்கத் தொடங்கியதாக, அதனால், மிக் கெழுந்த நீரானது மோதிக்கொண்டிருக்கும், மருதமரங்கள் செறிந்த தோட்டத்தினையும், தழைத்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடையது. கழாஅர் முன்துறை, அவ்விடத்தே, ஆரவாரம் பொருந்திய தன் சுற்றத்தினருடனே கூடியவனாகக் கரிகால் வளவன் புனல்விழாவினைக் கண்டிருந்தான்.

அத்தி என்பான் புனல் விழாக் கோலம் கொண்டனன். இனிய இசை தங்கிய ஒள்ளிய பொறிகளையுடைய புனைதற் சிறப்புடைய வீரக்கழல்கள் சிவந்த திருவடிகளிலே கிடந்து புரண்டன. கரிய கச்சினைக் கட்டிய, காண்பதற்கு இனிதான வயிற்றுமணியுடன், பெரிய பொன்னாலான பாண்டில் என்னும் கருவியும் ஒலிசெய்து கொண்டிருந்தன. புனல் விளையாட்டிலே விருப்புடன் ஆடிக்கொண்டிருந்த அத்தியின் அழகினைக் காவிரியும் விரும்பினாள்; அவனைக் கவர்ந்து கொண்டு, தன்னுள் ஒளித்துக் கொண்டாள்.

அங்ஙனமே நும்மையும் கவர்ந்து கொண்டனள் பரத்தை ஒருத்தி. அதற்காக, நும்மிடத்தே யாம் வெறுத்தலைச் செய்யோம். ஆயின், எம்மிடத்துப் பசலைநோய் படர்ந்தது. அதனை எம் நுதலிடத்தே காண்பீராக!

சேற்றிடத்தேயுள்ள, அழகிய துளையினையுடைய வள்ளைக் கொடியின் ஒள்ளிய கொடியினைப் பின்னுவித்து, வளவிய தோட்டினையுடைய நெல்லின் வளைந்த கதிர்கள் விரியும்படி துய்யினைத் தலையிலேயுடைய இறால்மீன்கள் பாய்கின்ற இடமாக விளங்குவது, அழகு பொருந்திய வளைந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளை உடையவனான குட்டுவனுக்கு உரிய மாந்தை என்னும் பேரூர். அதனைப் போன்ற என் நலத்தினை என்பால் மீளவும் தந்து, அதன்பின் செல்வீராக. துமக்குச் செய்யும் கடமைகளை யான் மிகவும் உடையேன். (அதனால், மறவாது தந்து செல்க)