பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 179



(தலைமகன் ஒருவன், முன்பொரு சமயம் பொருளிட்டுதலின் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து சென்று, அந்த வேதனையை உணர்ந்தவனாக, அவளுடன் பிரிய நினையாத அன்புடன் கூடி வாழ்ந்தனன். அவன் உள்ளத்திலே மீண்டும் பொருள் வேட்கை எழ, அவன், தன் தலைவியைப் பிரிந்து செல்லுதலைத் துணியாது, தன் நெஞ்சுக்கு இவ்வாறு கூறியவனாக, அந்த எண்ணத்தைக் கைவிடுகின்றான். இந்தப் பாங்கிலே அமைந்த செய்யுள் இதுவாகும்.

கோடை நீடலின் வாடுபுலத்து உக்க
சிறுபுல் உணவு நெறிபட மறுகி
நுண்பல் எறும்பி கொண்டளைச் செறித்த
வித்தா வல்சி வீங்குசிலை மறவர்
பல்லூழ் புக்குப் பயன்நிரை கவரக் 5

கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து
நரைமூ தாளர் அதிர்தலை இறக்கிக்
கவைமனத்து இருத்தும் வல்லுவனப்பு அழிய
வரிநிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெருநலம் சிதைந்த பேஎம்முதிர் பொதியில் 10

இன்னா ஒருசிறைத் தங்கி இன்னகைச்
சிறுமென் சாயல் பெருநலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசைதர வந்தோர் இரந்தவை
இசைபடப் பெய்தல் ஆற்று வோரே! 15

கோடைக்காலமானது நெடிதாயினமையினாலே வறண்டு போய்க் கிடந்த நிலத்திலே, உதிர்ந்த சிறிய புல்லரிசியான உணவினை, நுண்ணிய பலவாகிய எறும்புகள் ஒழுங்குபெறச் சென்று எடுத்துக் கொணர்ந்து, தம் புற்றிலே தொகுத்து வைக்கும். தாம் விதைத்துப் பயிரிட்டு வளர்த்துப் பெறாத அப் புல்லரிசியினைத் தம் உணவாகக் கொள்பவர், பெருத்த வில்லினைக் கைக்கொள்வோரான மறவர்கள்.

அவர்கள், பன்முறை, புகுந்து பாற்பசுக் கூட்டங்களைக் கவர்ந்துகொண்டு செல்ல, வளமுடன் அவ்வூரிலிருந்த குடி யினரும் அதனைவிட்டுப் போய்விடுவாராயினர். அப்படிக் குடிகள் போகிய, பெரிதும் பாழ்பட்டுக் கிடக்கும் ஊரின் மன்றத்தின் கண்ணே -

நரைத்த முடியினையுடைய முதியவர்கள், நடுங்கிக் கொண்டிருக்கும் தம் தலைகளைக் கவிழ்த்தவராகத், தம்முடைய கவர்த்த மனத்தே இருத்துகின்ற வல்லுத்தரையின் அழகு