பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அகநானூறு - நித்திலக் கோவை


நெஞ்சமே!

இடைப்பட்டாரான பிறர் அறிந்து கொள்வாரோ என அஞ்சினேம், மறைவான செய்திகளை எல்லாம் எமக்குள்ளேயே ஒளித்துக் கொண்டோம். பேய் கண்ட கனவினைப் போலப், பல்வகைப்பட்ட மாண்புகளுடனே நுட்பமாகப் பொருந்திய காமம் இதுவாகும்.

வெற்றிவேலினையும் மிகுந்த மறத் தன்மையினையும் கொண்ட தானையினை உடையவன் பசும்பூட் பொறையன் ஆவான். மேகங்கள் ஆரவாரித்து எழுந்து, அச்சத்தை அறி விக்கும் அகன்ற இடத்தையுடைய, மிகப்பெரிய கொல்லிமலை அவனுக்கு உரியது. அதனுச்சியினின்றும் வீழ்ந்து மிக்குப் பெருகிச் செல்லுகின்ற அருவிநீர் ஒலியினைப்போல், ஊரிலே அலரொலி எழுமாறு பிரிந்தவர் நம் காதலர்.

அறிவு ஒன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு இரவன் மாக்கள் சென்றனராயின், குன்றொத்த களிறுகளுடனே, நல்ல ஆபரணங்களையும் அவர்கட்குக் கொடுத்துவிடும், மிகுதியாகப் பேசப்பட்ட வளவிய புகழினை உடையவன், பாரி வள்ளல். அவனுடைய பறம்பு மலையிடத்தே, வரிசையிட்டுப் பறத்தலையுடைய குருவியினம், வளைந்த புறத்தையுடைய செந்நெற் கதிர்களைக் கொண்டுதரும் பொருட்டாகவும், ஒவ்வோர் அமயத்துத் தாமே இரைதேடும் தன்மையினவாகியும் செல்வனவாகி, காலையிலே வெளியேறிப் போய்ப் பொழுது சாயும் மாலை வேளையிலே மீண்டும் திரும்பி வரும்.

அவரை நினைந்து துயரங்கொள்ளுகின்ற மாலைக் காலத்திலே, அவை மீண்டு வருவதுபோலவே அவரும் வருவார் என்று உணர்ந்த என் மடமை நிரம்பிய நெஞ்சமே! இனியேனும் நீ நின் சந்தேகத்தைப் பல்லாற்றானும் தெளிந்து கொள்வாயாக.

வற்றலாகிப் பட்டுப்போன மரங்கள் பலவற்றைப் பொருந்தியிருக்கும் 'சிள்வீடு' என்னும் மரவண்டுகள், உப்பு வாணிகருடைய வண்டிமாடுகளின் கூட்டத்து மணியோசை யைப்போல ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் பாலைவழியைக் கடந்து, அழிகுளத்து நீரினின்றும் மீன்கள் நீருள்ள இடத்தை நாடியவாய் வெளியேறிச் சென்றாற்போல, அவ்விடத்தே அவர் வழிநடந்த இடத்துடாக நாமும் அவரை நோக்கி நடந்து, அவரைச் சென்றடைவதற்கு நீயும் துணிவு கொள்வாயாக.

சொற்பொருள் : 1. இடை - இடையிலே நிகழ்ந்தன வென்றேனும், இடைப்பட்டார் பலர் என்றேனும் கொள்க.'மறை - மறைத்தலான காமத்துயரம். 2. பேஎய் கண்ட கனவு - பேய்