பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அகநானூறு - நித்திலக் கோவை



382. தம்முறு விழுமம்!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.

(தலைவனும் தலைவியும் தம்முட் கண்டு காதலித்துக் களவு வாழ்விலே ஈடுபட்டும் வருகின்றனர். தினையறுத்தபின் தலைவி இற்செறிக்கப்பட்டதனால் பகற்குறி வாயாதுபோக இரவிக் குறியினை நாடுகின்றனர். இந்த நிலையிலே, தலைவனைத் தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்ளத்தூண்டுவாளாகத், தோழி, தலைவியிடம் சொல்வாள் போலச் சொல்லியது இது. இதன்கண், அன்னை ஐயுற்று நெடுவேளை வேட்டு வெறியாடலுக்கு முயல்கின்றனள் என்பதனால், இனிச் சந்திப்பு வாய்ப்பது அரிதாதலும் கூடுமென்பதனைப் புலப்படுத்தலும் காண்க)

பிறருறு விழுமம் பிறரும் நோப
தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறுபல் குரல. ஒருதுக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேட் பாடுகொளைக்கு ஏற்ப 5

அணங்கயர் வியன்களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமரென ஆங்கவற்கு
அறியக் கூறல் வேண்டும் - தோழி!
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புனை யாகச் 1O

சாரற் பேரூர் முன்துறை இழிதரும்
வறணுறல் அறியாச் சோலை
விறன்மலை நாடன் சொல்நயந் தோயே!

தோழி! அருவியிடத்தே பாய்ந்த கருவிரலையுடைய மந்தியொன்று, செழுமையாகக் காய்த்தலைக் கொண்ட பலவின் பழத்தினைத் தெப்பமாகக் கொண்டதாக, மலைச் சாரலிலுள்ள நம் பேரூரின் நீர்த்துறையின் முன்பாக வந்தும் இறங்கும். அத்தகைய, வறட்சி அடைதலை அறியாத சோலைகளை யுடைய, வெற்றி பொருந்திய மலைநாட்டின் தலைவன் நின் காதலன். அவனுடைய சொல்லை விரும்பி, அவனை நீயும் ஏற்றுக் கொண்டனை!

பிறருக்கு வந்தடையும் துன்பத்தைக் காணின், தாம் ஏதிலரேனும் நல்லவராயின், அந்தப் பிறரும் நோவா நிற்பர். அங்ஙனமன்றித் தாம் அடைகின்ற துன்பத்தை அவர் பெரிதாகக் கொள்ளமாட்டார்.