பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 191



கடம்பினிடத்தே கொடியினைக் கட்டி, அதற்குக் கண்ணியும் சூட்டிப் பல்வேறு குரலையுடைய ஒரு தூக்கினையுடைய தாளத்தின் இனிய இசையினை முழக்கியவராக, நம்மவர், காட்டிற் பொருந்திய நெடுவேளாகிய முருகப் பெருமானுக்குப் பாடு கொள்ளுதற்குப் பொருத்தமான வெறியாட்டுச் செய்யும் பரந்த களம் சிறப்புற, மெல்ல வெறியாடுதலை நிகழ்த்தலையும் விரும்பினர். நம் தலைவனைக் காணுமிடத்து, இங்ஙனமென்று, நம் நிலையை அவனுக்கும் அறியும் படியாக நாம் கூறுதல் வேண்டும்.

சொற்பொருள்: 1. விழுமம் - துன்பம் நோப நோதலைக் கொள்வர்; அதாவது, உதவுவர். 2. தமக்கோ தஞ்சம் - தம்மளவில் எளிதாகவே கொள்வர். 3. கடம்பு - கடப்ப மரம். 4. தூக்கு - தாளங்களின் முறைமையினாலே வரும் செந்துக்கு முதலாகிய தூக்குவகையைக் குறிப்பது. தூக்கு இன்னியம் - தூக்கினைப் பொருந்திய இனிய வாச்சிய ஒலி. 6. நெடுவேள் - முருகன். 5. பாடுகொளை-பாடு கொள்ளல்; வேண்டி வழிபடல். 6. அணங்கு அயர்தல் - வெறியாடுதல்.

விளக்கம்: 'அருவி பாய்ந்த மந்தி, பலாப் பழத்தைப் புணையாகக் கொண்டு கரைசேரும் நாடன்' எனவே, தலைவனும் தவறாது தான் மேற்கொண்டவற்றுள் வரும் இடைப்பட்ட இடையூறுகளைக் கடந்து இன்புறுவதற்கு உரியவன் என்றனள். 'நமர் நெடுவேளைக் குறித்த வெறியாடலை மேற் கொண்டனர்’ என்றதனால் களவினைத் தம்மவர் அறிந்தன ராதலையும் குறிப்பாகப் புலப்படுத்தினள்.

'பிறருறு விழுமம் பிறரும் நோப தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்' என்றதனால், தாமுற்ற பிரிவினாலும் பிறர் அறிவத னாலும் நேர்ந்த துயரினைத் தலைவனும் மாற்றுதற்கு அருளுடையதனாதல் வேண்டும் என்றனள்.

நெடுவேள் - முருகனைக் குறித்தது. ‘நெடிதும் விரும்பப் படுபவன்' என்பது பொருள். 'காடு' என்றது, இங்குக் குறிஞ்சி நிலத்துக் காட்டுப் பகுதியை என்று கொள்ளல் வேண்டும்.

383. யாரைப் பெறுகுவை?

பாடியவர்: கயமனார். திணை:' பாலை, துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

(சீரும் சிறப்புமாகச் சுற்றமும் ஆயமும் பாராட்ட வளர்ந்த தம் மகள், தன் காதலனுடன் கூடி உடன்போக்கிலே சென்றுவிட, அதனை நினைந்து நற்றாய் வருத்தமுற்றுப் புலம்புகின்ற முறையிலே அமைந்தது இச் செய்யுள்)