பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அகநானூறு -நித்திலக் கோவை


விரும்பிய காதலுடையவன் ஆயினேன். பெரிதான தேரிலே ஏறியதனை அறிந்தேனே அல்லாமல், இங்கு வந்தடைந்த பரிசினை நன்கு அறிந்தவன் அல்லேன். முயற்குட்டிகள் தாவிக் குதித்து மகிழும் முல்லையாகிய அழகிய காட்டிடத்தே, கவர்த்த கதிரினையுடைய வரகினைக் கொண்ட சிறிய ஊரினிடத்தே, மெல்லிய இயலினையுடைய தலைவியின் இல்லத்திடத்தே தேரினை நிறுத்தி, 'இறங்குக' என்று கூறிய நின்னுடைய சொல்லைக் கேட்டு மருட்சியே கொண்டேன்! வானிலே இயங்கும் இயல்பினையுடைய காற்றினையே குதிரை வடிவாகப் பூட்டியிருந்தாயோ? கூறுவாயாக" என்று பாராட்டியவனாகத், தனது குன்றொத்த மார்பிடத்தே அவனைச் செறிப்போனாய் இறுகத் தழுவியவனாகப், பெருந்தகைமையுடைய நம் தலைவன், அவனையும், தன் மனைக்கண் உடன் கொண்டவனாகப் புகுந்தனன்.

திருந்திய அணிகளையுடைய தலைவியும், அன்று ஒரு சிறந்த விருந்தினனைப் பேணும் வாய்ப்பினைப் பெற்றனள்!

சொற்பொருள்: 1. அருந்தொழில் செய்து முடித்தற்கு அருமை உடையதாகிய போர்த் தொழில். 2. புரிந்த காதல் - விரும்பிய காதல். 4 தாஅய் - தாவி, 5. முயற்பறழ் - முயற்குட்டிகள். முல்லையம் புறவு - முல்லையாகிய அழகிய காடு.9. வளி - காற்று. 10. மான் - குதிரை. 12 வரை மருள் மார்பு - மலையென மயங்கத் தூண்டும் பரந்த திண்ணிய மார்பு, நளிப்ப - செறிய இறுக. 14. விருந்தேர் பெற்றனள் - விருந்தாகிய ஒரு சிறப்பினை அடைந்தனள்.

விளக்கம்: ‘புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறியதறிந்தன்று அல்லது வந்தவாறு அறிந்தன்றோ இலனே!' என்றதன் அமைதியைக் கருதுக. விரும்பிய காதலொடு தேரேறியவன் தேரின் இயக்கத்தை மனத்தெண்ணாது தலைவியின் நினைவிலேயே மூழ்கியிருந்தனன் என்பதும் விளங்கும். இதனை, 'இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே!' என்ற பின்வரும் தொடரும் வலியுறுத்தும்.

தேர் விரையவந்த சிறப்பிற்குத் தலைவன் தன் பாகனை உவந்து பாராட்டும் சிறப்பினைக் காண்க. 'மானுருவாய் நின் மனம் பூட்டினையோ? வான் வழங்கு இயற்றை வளி பூட்டினையோ? உரைமதி' என்று பாராட்டும்போது, வலவனின் பூரிப்பு எங்ஙனமிருக்கும் என்பதனையும் நினைத்துப் பார்க்கவும்.

நெடுந்தகையாகிய தலைவன், அத்துடனும் அமையாது, வலவனை மார்பிறுகத் தழுவியவனாகத் தன்னுடன் தன் மனையினுள்ளும் அழைத்துச் சென்று, அவனுக்கு விருந்துட்டியும் உபசரிக்கின்றான்.