பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 199


அவன் கிடந்த கிடையினைக் கண்டதும், அவனை மல்லனெனத் தான் கொண்டிருந்த எண்ணத்தை நினைந்து, அங்கே நாணமுற்றவனாயின் என்க.

இங்ஙனமே, தலைவனின் சூளுரைகளால், அவன் தலைவியை அன்றிப் பிறரைக் கருதான் என உறுதி கொண்டிருந்த தோழியும், பகற் போதிற் பரத்தை வந்து தங்களுடன் தங்கை உறவு கொண்டாட முற்படவே, தலைவனின் பொய்ம்மையை நினைந்தும், தாம் அன்று அவனுரையை மெய்யெனக் கொண்ட தம் பேதைமையினை நினைந்தும் நாணினள் என்று பொருந்திக் கொள்க.

இதனால், தலைவனுக்கு உறவுடைய பரத்தையர், தலைவியரிடம் தமக்குரிய தங்கை உறவினைக் கூறி வந்து போதலையும் உடையவராயிருந்தனர் எனக் கருதலாம்.

‘புலவுநாறும் நீர்நாயின் போத்து, வாளை நாளிரை தேரும் ஊர' என்றது, 'தலைவனும் பரத்தையர் சேரியில் சுற்றியலைந்த அந்தச் செவ்வி தோன்றக் காலையில் தலைவியை நாடி வருகின்றனன் என்று கூறிப் பழித்ததாம்.

மேற்கோள்: இச் செய்யுளை எடுத்துக்காட்டி, "இதனுள் யான் நினக்குத் தோழியாவேன் எனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு, தான் நாணினே னென்று தலைவனுக்குத் தோழி கூறியவாறு காண்க" எனப், 'பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த' என்னும் கற்பியற் சூத்திரத்துப் பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்' என்னும் பகுதிக்கண் உரைத்தனர் நச்சினார்க்கினியர்.

387. இருப்பவர்க்கு உரைமின்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை: பாலை, துறை: தலைமகளது குறிப்பறிந்து, தோழி தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது. -

(தலைமகன் ஒருவன், தன் தலைவியைப் பிரிந்துவேற்று நாடு சென்று பொருள்தேடி வருதற்கு மிகவும் விரும்பிய உள்ளம் கொண்டனன். அதனைத் தானே தலைவிபாற் கூறுதற்கு மனங்கொள்ளாத அவன், தலைவியின் தோழியிடத்தே சென்று, அவளுடைய உதவியை நாடுகின்றான். அவள், 'அவனுடைய பிரிவினால் துயருற்றுத் தலைவி இறந்தே போவாள்' எனக் கூறி அவனுடைய போக்கைத் தடுத்து விடுகின்ற முறையிலே அமைந்தது இச்செய்யுள்)