பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

அகநானூறு - நித்திலக் கோவை



விளக்கம்: "வேறு புலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து. வேங்கடம் இறந்தனராயினும், நின் ஏமுறு புணர்ச்சி இதன்துயில் மறந்து ஆண்டவர் நீடலர்” என்க.

'அறு செல் வம்பலர் காய்பசி தீரிய பொங்கவிழ் புன்கம். பாலோடு பகுக்கும். புல்லி நன்னாடு' என்க. இதன் கண் வரகரிசியைச் சமைக்கும் வகை முறையாகச் சொல்லப் பட்டதும் காண்க.

மேலும், அவர் வருத்தமின்றிச் சென்று திரும்புவர் என்பதும் இதனாற் பெறலாம். புன்கம் பாலொடு பகுக்கும் நாடு, நிரைபல குழிஇய நாடு, தேன்துங்கு உயர்வரை நன்னாடு, நெடுமொழிப் புல்லியின் நாடு வேங்கட நன்னாடு என்க.

394. விருந்தயர வருக!

பாடியவர்: நன்பலூர்ச் சிறுமேதாவியார். திணை: முல்லை. துறை: இரவுக்குறித் தலைமகளை இடத்துய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாஅயது.

(தலைவி, தலைவனுடன் இரவுக்குறியிற் சென்று கூடி வருகின்ற கனவுக்காலத்திலே, ஒருநாள். அவளைக் குறித்த இடத்திலே சேர்த்துவிட்டு வரும் தோழி, தலைவனைச் சந்தித்து, அவனிடம், விரைவிலே தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்ளுமாறு கூறுகின்றனள். இந்த முறையிலே அமைந்த செய்யுள் இது)

களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு 5

சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்தப் பின்றை, நீயும்
இடுமுள் வேலி முடக்காற் பந்தர்ப்
புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றிற்
புனையிருங் கதுப்பின்நின் மனையோள் அயரப் 10

பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ -
காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும் 15

புன்புல வைப்பின்னம் சிறுநல் ஊரே.