பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 11


தலைமையான தன் ஆண்மானினோடும் கூடியதாகி, அசையும் கிளைகளையுடைய குருந்தமரத்தின் புள்ளிபட்ட நீழலிலே மகிழ்ச்சியோடு தங்கியிருக்கும்.

ஆரவாரத்துடன் வண்டினம் ஊதுதலினாலே, பிடவத்தின் முகைகள், தம் பிணிப்பவிழ்ந்தனவாக மலரும். அரிய புள்ளிகளையுடைய மயில்கள், தோகைகளை விரித்து ஆடி நிற்கும். வரிப்பட்ட மணலிடத்தே, நீலமணியோடு வைத்திழைத்த செம்பவளத்தினைப்போல், அழகுமிக்க காயாவின் வாடிய பூக்களும், தம்பலப் பூச்சிகளும், பலவாக ஒன்றுபட்டுக் கிடந்து, ஈரம்பட்ட அச் செம்மண்நிலத்தினை அழகுசெய்தனவாகக் கிடக்கும்.

காடெல்லாம் இப்படியாகப் புத்தழகினைக் கொண்ட இம்மழைப் பருவம் வந்துறுகின்ற காலத்திலே -

ஏந்திய கொம்புகளைக் கொண்ட போர் யானைகளையுடைய வேந்தனின் பாசறையிடத்தே ஆற்றுவதற்குக் குறித்த தொழிலினாலே, வேற்று நாட்டிடத்தே சென்று தங்கியிருப்பவராகி, நமக்கு அருள் செய்யாதவராயினர் நம் காதலர். 'அவர் சற்றும் அறவுணர்வு உடையவரே அல்லர்’ என்று, நம்மை நினைந்து மனம் நொந்து, நாம் அவளைக் கருதிக்கொண்ட பிரிவு நோயின் தன்மையினையும் அறியாதவளாகி, அவள் தான் நம்மை வெறுத்தலையும் செய்வாளோ?

சொற்பொருள் : 1. கருவி மாமழை - தொகுதிப்பட்ட கார்மேகங்கள். 3. சூர் - கண்டாரை அச்சமுறச் செய்யும் தெய்வம்; சூர்ப்பனிப்பு - அங்ஙனம் அஞ்சியவரின் மேனி நடுங்குதல் போன்றதான நடுக்கம். ஆலி - பனிக்கட்டி, 8. தெறிதடை - துள்ளுநடை 9. இரலை - ஆண்மான். 10. குருந்து ஒருவகை மரம். 14. செம்மல் - வாடியுலர்ந்த மலர். 15. ஈயல் மூதாய் - தம்பலப்பூச்சி. 18. நன்றும் - பெரிதும்.

விளக்கம் : மழைத் தொடக்கத்தினாலே காடு அணி கொண்ட தன்மையினைக் காண்பவள், தான் அவளருகே இல்லாமையினாலே, தன் மேனி அணிகொள்ளாதிருத்தலை நினைவாள்; அதனால் தன்னைப் பழித்து ஊடியிருப்பாளோ என நினைந்து, காதலன் வருந்துகின்றான். குறித்த காலம் பிழைபடுதற்கு நேர்ந்தது; தன் வரவிற்கு ஏங்கியிருக்கும் அவள் தன் வாக்குப் பொய்ப்பட்டுப் போனதை நினைவாள்; அது நியாயமும் ஆகும் எனக் கருதுபவனாக, நன்றும் அறவர் அல்லர் நம் அருளாதோர்...... எனப் புலக்குங்கொல்?’ என்று வேதனைப்படுகின்றான்.