பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

அகநானூறு - நித்திலக் கோவை



396 - நின்னை விடேன்!

பாடியவர் : பரணர் திணை : மருதம், துறை : காதற் பரத்தை தலைமகற்குச் சொல்லியது. சிறப்பு : காவிரி அத்தியைக் கவர்ந்த செய்தியும், வஞ்சிநகரின் எழிலும், வடவரையில் விற்பொரித்த சேரரின் செயலாண்மையும், ஆய் எயினன் என்பானின் நட்புக்கு உயிரளித்த செயலும்.

(தலைமகன் ஒருவன், தான் மணந்து இல்லறம் நிகழ்த்தி வருகின்ற தன்னுடைய மனைவி இருப்பவும், பரத்தை ஒருத்திபாற் காதலுற்று அவளுடனும் கூடி வாழ்ந்து வருபவனும் ஆனான். அவனுடைய காதற் பரத்தையான அவள், ஒரு சமயம், தலைவன் தன்னைக் கைவிட்டு மீளவும் மனைவியிடத்தே செல்லலுறு வானோ என அஞ்சினள். அவள், அப்போது, தலைவனிடத்தே கூறிய முறையிலே அமைந்த செய்யுள் இதுவாகும்.)

தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்-கொடித்தேர்ப்
பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞ்டுலியொடு தாக்கித் 5

தன்னுயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறலருங் கடவுள் முன்னர்ந் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாப் பிறன் ஆயினையே 10

இனியான் விடுக்குவென் அல்லன் மந்தி
பணிவார் கண்ணன் பலபுலந்து உறையக்
கடுந்திறல் அத்தி ஆடுஆணி நசைஇ,
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ 15

ஆரியர் அலறத் தாக்கிப் பேர்.இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே!

தலைவனே! நின்னைப் பற்றினேன்! செல்லல் வேண்டா! கொடி விளங்கும் தேரினையும், பொன்னாலாகிய பூண்களையும் உடையவன் நன்னன் என்பவன். புன்னாட்டினர் வெகுண்டு அவன்பால் எழுந்தனராக, யாழிசை விளங்கும் தெருக்களையுடைய அவனது பாழி நகரிடத்தே நின்று, 'அஞ்சேல்' என்று கூறினன் ஆஅய் எயினன் என்பவன். தான், அஞ்சேல் என்று