பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 235


(மதுரை) ஈழத்துப் பூதன்தேவனார் (307)

ஈழநாட்டைச் சார்ந்தவராக மதுரைக்கண் வந்திருந்து சங்கத்தமிழ்ச் சான்றோருள் ஒருவராகிச் சிறந்த புலமையாள ராகத் திகழ்ந்தவர் இவர் 'பூதன் தேவனார்’ என்றலால் இவர் ‘தெய்வப்பெயர் பெற்றவர் எனக் கருதுவர் இவராற் பாடப் பெற்றவன் பசும்பூண் பாண்டியன் ஆவான். இவர் செய்யுட் களாக, அகத்துள்ளும் குறுந்தொகையுள்ளும் மும்மூன்றும், நற்றிணையுள் ஒன்றும் காணப்படும். சிலர் இவரைப் பெளத்த சமயத்தினர் எனவும் கருதுவர். 'கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து' என இவர் குறிக்கும் செய்தி, அந்நாளிற் கந்தத்துக் கடவுளை மேற்கொண்டு மக்கள் போற்றிவந்த தன்மையினை நமக்கு உணர்த்தும். மணிமேகலையுள் கூறப்பெறும், 'கந்திற் பாவை' செய்தியினையும் இதனோடு ஒப்பிட்டுக் கண்டால், இந்தக் கந்திற் கடவுளைப் போற்றும் மரபின் பழைமை உறுதிப்படுவதாகும்.

உலோச்சனார் (330, 400)

இவருடைய பெயரமைதி இவரை நெய்தற் பகுதியைச் சார்ந்தவர் எனவும், பரதவர் குலத்துப் பைந்தமிழ்ச் சான்றோர் எனவும், காட்டும் அதற்கேற்ப இவருடைய செய்யுட்கள் நெய்தல் திணையினைச் சார்ந்தவையாகப் பெரும்பாலும் விளங்கு தலையும் நாம் காணலாம். பொறையாற்றுப் பெரியன் என்பானும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இவராற் பாடப் பெற்றோர் ஆவர். சங்கத்தொகை நூற்களுள் இவர் பாடியவையாக 35 செய்யுட்கள் காணப்பெறும், தேரின் செலவினைக் கடலிற் சென்று படிப்படியே கண்ணுக்கு மறையும் படகினைப்போல’ என்றதும், 'தலைவனோடு தன் நெஞ்சம் தூது சென்றதாக' உரைக்கும் தலைவியின் தன்மையும், அலர் உரைத்துப் பழித்த ஊர், தலைவன் வரைந்து வரக் கண்டு புதிய களிப்புடன் திகழ, அது கண்டு நகைகொள்ளும் கன்னியரின் தன்மையும், பிறவும், இச்செய்யுட்களுள் சுவையுற விளங்கக் காணலாம்.

உறையூர் முதுகூத்தனார் (329)

உறையூர் முதுகூற்றனார் எனவும் இவர் பெயர் வழங்கும்; முதுகொற்றனார் எனவும் காணப்பெறும். சங்கத் தொகை நூற்களுள் இவர் செய்தவாக விளங்குபவை எட்டுச் செய்யுட்கள் ஆகும். சோழன் போர்வைக் கோப்பெருநற் கிள்ளியின் தந்தையாகிய வீரை வேண்மான் வெளியன் தித்தனை, நற்றிணை ஐம்பத்தெட்டாவது செய்யுளுட் பாடியிருத்தலால் அவன் காலத்தவர் எனலாம். உறையூர்ப் பங்குனி முயக்கத் திருநாட் சிறப்பினை இவர் செய்யுளுள், நன்கு விளங்கியிருப்பக்