பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

அகநானூறு - நித்திலக் கோவை


காணலாம். இச்செய்யுளுள், 'புலிக்குட்டியானது, நீருண்ணலை விரும்பித் துதிக்கையை நீரிலே இட்ட களிற்று யானையின் கையினைக் கடித்து முழக்கமிடும் வறுஞ்சுனை எனக்கூறும் சிறப்பினைக் காணலாம். காட்டகத்துக் குடியிருப்புக்கள், 'குவிந்த குரம்பை அங்குடிச் சீறுர்’ என்ற இவர் சொற்களாற் புலனாதலைக் காண்க.

ஊட்டியார் (388)

இவர் பாடியவை இச்செய்யுளும் அகநானூற்றுக் களிற்றியானை நிரையின் 68ஆவது செய்யுளும் ஆகும். 'ஊட்டியன்ன ஒண்தளிரச் செயலை என அதனிடத்தும், 'ஊட்டியன்ன ஊன்புரள் அம்பொடு’ என இந்நூலின் 388 ஆவது செய்யுளிடத்தும் வருவனகொண்டு, இவரை ஊட்டியார் என்றனர் ஆகலாம். 'இரவுககுறியிடம் நோக்கிச் செல்லும் தலைமகள், அன்னை உறங்கியதனை அறிய முயலும் தன்மையை விளக்குவது களிற்றியானை நிரைச் செய்யுள் (68). இச்செய்யுளுள், அன்னை வெறியாடலுக்கு ஏற்பாடு செய்தலைக் குறித்து, வேலன் 'எம்மிறை வணங்கலின் இந்நோய் வந்தன்று தணிமருந்து அறிவல் என்னுமாயின், நும்மிறை. ஊட்டியன்ன ஊன்புரள் அம்பொடு காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோ என வினவின் எவனோ?' எனத் தலைமகள் கேட்பதாக வருவது மிக்க நயம் உடையதாகும்.

எயினந்தை மகனார் இளங்கீரனார் (361, 371, 395, 399)

வேட்டுவக் குடியினரான இவர், 'எயினந்தையார் என்னும் தமிழ்ச் சான்றோரின் மகனாராவார். 'எயினந்தை' என்ற சொல் இவரை வேட்டுவ மரபினராகக் காட்டுவது போன்று. 'கீரனார்’ என்ற சொல், நக்கீரனார்போல இவரும் சங்கறுக்கும் குலத்தினர் எனக் காட்டுவது ஆகும். இவர் பாடியவையாகச் சங்கத்தொகை நூற்களுள் பதினாறு செய்யுட்களைக் காணலாம். ‘உதியன், பாறையன் ஆகிய சேரர்கள் இவராற் பாடப்பெற்ற சிறப்பின ராவர். தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண், மாயிதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்', 'வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் கவவுப் புலந் துறையும் கழிபெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியில் சிறந்த தொன்றில்லென' தண்கயம் பயந்தவண்காற் குவளைமாரி மாமலர் பெயற்கேற்றன்ன, நீரொடு நிறைந்த பேரமர் மழைக் கண், 'அழன் மேய்ந்து உண்ட நிழல்மாய் இயவு', 'பருகுவன்ன காதல் உள்ளமொடு திருகுபு முயங்கல்’ என விளைப்பவாம். இயற்கை எழிலை நுண்மையாகக் கண்டு உவமித்துக் கூறும் ஆற்றலாற் சிறந்தவர் இவரென்பதையும் இவை காட்டுவனவாம்.