பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

அகநானூறு - நித்திலக் கோவை


பாடியவர். இவரும், ஆத்திச்சூடி முதலியன பாடியவரும், கம்பர் காலத்தவரும் வேறு வேறாவார்கள். இச்செய்யுளுள், பாரியின் பறம்பு முற்றுகையின்போது, கபிலர் குருவிகளைப் பயன்படுத்திக் கதிர் கொணரச்செய்து பசிபோக்கிய செய்தியினைக் குறிப்பிட்டுள்ளனர். ‘புலங்கந்தாக இரவலர் செலினே வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும் உரைசால் வண்புகழ்ப் பாரி' எனப், பாரியும் இதன்கண் போற்றப் பெற்றுள்ளனன்.

கபிலர் (318, 332, 382)

வேள் பாரியின் கெழுமிய நட்பினராக்வும், 'பொய்யா நாவிற் கபிலன்', 'அந்தணாளன் கபிலன்' எனவெல்லாம் ஆன்றோர் போற்றும் உயர்ந்தோராகவும் விளங்கிய அந்தணாளர் இவராவர். பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் பெரும் பரிசில் பெற்றவர் இவர். சங்கத்தொகை நூற்களுள் 235 பாடல்களைப் பாடியவராக, அதிகமான செய்யுட்கள் செய்த சான்றோராகத் திகழ்பவர் இவரே. பத்துப்பாட்டின் குறிஞ்சிப் பாட்டும், கலித்தொகையின் குறிஞ்சிக் கலியும், ஐங்குறு நூற்றின் குறிஞ்சி பற்றிய நூறும் இவரியற்றியவை. இவர் வேறு தொல் கபிலர் என்பார் வேறு. பாரியின் இறப்பிற்குப் பின்னர், பாரிமகளிர்க்கு உறுதுணையாகிக் காத்து வந்து, பின் அவர்களைத் தக்கவர்பால் ஒப்பித்துவிட்டு, வடக்கிலிருந்து உயிர் துறந்த சான்றாளரும் இக்கபிலர் ஆவர். இந்நூலுள் வந்துள்ள செய்யுட்களுள், காதலனின் இரவு வருகையைத் தடைசெய்ய நினைப்பவள், 'காட்டினைக் கடந்து நீ நின்னூர் சென்று சேர்ந்தபின், நாய்பயிர் குறிநிலைகொண்டு ஊதல் வேண்டுமாற் சிறிதே' என வேண்டுவதும் (318),

'அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின் வண்டிடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும் தலைநாள் போன்மே' எனத் தலைவி, தோழியிடத்துத் தானுற்ற இன்பத்தைச் சிறப்பித்துக் கூறுதலும் (332).

'பிறருறு விழுமம் பிறரும் நோப, தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்' என நுவலும் சான்றோரின் இயல்பும்,(382) பிறவும், மிக்க நயம் உடையவனவாகும்.

கயமனார் (321, 383, 397)

இவர் பாடியவாகச் சங்கத்தொகை நூற்களுள் காணப்பெறுவன 23 செய்யுட்கள் ஆகும். குறுந்தொகையின் ஒன்பதாவது செய்யுளுள், 'பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி ஒதம் மல்கு தொறும், கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்' என்றுரைத்த நயம்பற்றி, இவரைக் கயமனார் என்றனர் ஆன்றோர். அன்னி என்பவன் குறுக்கைப்