பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 251


பிழையாத் தொல்புகழ் பெற்ற நன்னன்’ என்று நன்னனின் சிறப்பினை இவர் குறித்துள்ளனர்.

வடம வண்ணக்கண் பேரி சாத்தனார் (306) 'வண்ணக்கண்' என்னும் அரசகருமம்பூண்டிருந்தவர் இவர். பேரிசாத்தன் என்னும் பெயரினர். தேர்வண்மலையன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஆகியோரைப் பாடியவர் இவர் 'ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம்’ (புறம் 198) என இவர் குறிப்பதனால், அந்நாளில் சிவபிரான் ஆலமர் கடவுளாக அறம் உரைத்த புராண வழக்கு நிலவியதனை நாம் அறியலாம். 'பருகுவன்ன காதலொடு திருகி, மெய்புகுவன்ன கைகவர் முயக்கத்து ஒருயிர் மாக்கள் (அகம் 305) எனக் காதல் வாழ்வினரை இவர் அருமையுறக் குறிப்பர்.

வடமோதங் கிழார் (317) வேளாண் மரபினரான இவர், இச்செய்யுளையும், புறநானூற்று 260ஆவது கையறுநிலைச் செய்யுளையும் செய்தவர் அவர் 'குவிமுகை முருக்கின் கூர்நுனை வையெயிற்று நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும்’ என்று இவர் கூறுவது அந்நாளில் பெண்கள் நகத்திற்குச் சிவப்புச்சாயம் தீட்டி வந்த வழக்கத்தினைக் காட்டும். மேலும் பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி நுண்கோல் அறை குறைந்து உதிர்வனபோல, அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்குசினை நறுவி கோங்கலர் உறைப்ப' என நயமுடன் உவமித்துக் காமர் வேனிலை உரைப்பவரும் இவர்.

வெள்ளி வீதியார் (362)

இவர், கணவர் பிரிந்து சென்றவனராக, அதனாற் பெரிதும் வருத்தமுற்றுத் துயருற்றவர் என்று ஒளவையாராற் கூறப் பெற்றவர். நிலவு எழுந்ததனை, இடைமுலைச் சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும், சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின் இலங்கு வெள்ளருவி போலவும் நிலங்கொண்டன வால் திங்களங் கதிரே என இனிதாகக் கூறியவர் (அகம் 362) இவர். 'உடைமதில் ஒரரண்போல அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே! (அகம் 45) என்ற ஏக்கம், இவருடைய சொந்த ஏக்கத்து எதிரொலியே எனவும் கருதுவர். ‘நாட்டின் நாட்டின், ஊரின், ஊரின், குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரும் உளரோ? என்றாற் போல உள்ளம் பிணிக்கும் பல பகுதிகளை இவரது செய்யுட்களுள் காணலாம்.