பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

அகநானூறு - நித்திலக் கோவை




பிற்சேர்க்கை - 2

பாடப்பட்டோர் வரலாறு

அஞ்சி (அதியமான்) (352, 372)

சேலமாவட்டத்துத் தர்மபுரியாக இந்நாளிலே விளங்கும் பண்டைத் தகடூரின்கண் வீற்றிருந்து, மழவர்கோமானாகவும், வள்ளலாகவும், ஒளவைக்கு அரிய நண்பனாகவும், பேராண்மையும் தமிழறிவும், சான்றாண்மையும் மிக்கோ னாகவும் விளங்கிய குதிரைமலைத் தலைவன் இவன். சேரமன்னர்களால் முடிவில் தகடூர்ப் பெரும்போரிலே அழிவு எய்தியவன். ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் இவனைப் பாடியவர்கள். இவன் மகன் பொகுட்டு எழினி என்பவன். இவன் அத்தை மகள் நாகையார் பெரும் புலமைச் செறிவுடன் திகழ்ந்தவர். இந்நூலின் 352ஆவது செய்யுள் இவனைப்பாடும் பாணர்கள் நாளும் புதுவது புதுவதாக நல்லிசையோடு இவனைப் போற்றிய செய்தியைக் குறிக்கின்றது. 372ஆவது செய்யுள் இவனுடைய வீரர்கள் பகைவரது ஆநிரைகளைக் கவருகின்ற போரிலே எழுப்பும் உடுக்கை யொலினைக் குறிப்பிடுகின்றது.

அதியன் (325)

'அதியன்’ எனக் குறிப்பிடப் பெறுபவர், அதிகமான் நெடுமான் அஞ்சியும், வெளியன் வேண்மான் ஆஅய் எயினனும் இவனும் ஆவர். இவன், அள்ளன் என்னும் படைத் தலைவனுக்கு நாட்டினை நல்கியதாக மேற்குறித்த செய்யுள்களால் அறிகின்றோம்.

அள்ளன் (325)

ஒரு படைத்தலைவன், அதியனுக்குப் படைத்துணை உதவியவன். அவனால் நாட்டினைக் கொள்ளப் பணிக்கப் பெற்று, நாடுபெற்று வாழ்ந்தவன். -

ஆஅய் எயினன் (301)

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பான் இவன். இச்செய்யுளில், பாழியிடத்தே நன்னனுக்கு 'அஞ்சேல் என்று தான் கொடுத்த உறுதி மொழியைப் பேணுவானாக, இவன் மிஞலியோடு போரிட்டு மாய்ந்த சிறப்பினைப் பரணரே உரைக்கின்றனர். வெளியத்து வேளிர்கள் சேரருக்குப் பெண் கொடுக்கும் சிறந்த தகுதி பெற்றவராக விளங்கிய குடியினர்.