பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 253


இவனுடைய அருளுள்ளமும் சொல்லைப் பேணும் உறுதியும் மிக்க சிறப்பினவாகும்.

ஆட்டன் அத்தி (376, 396) இவன் ஆதி மந்தியாரின் கணவன். ஆடல் வல்லவனாக 'ஆட்டன்’ என்ற சிறப்புப் பெயருடன் விளங்கியவன்; சேர நாட்டைச் சார்ந்தவன். காவிரிப் புதுப்புனல் விழாவிலே பலரோடும் நீராடிய காலத்துக் காவிரியாற் கொள்ளப்பட்டான் எனவும், ஆதிமந்தியார் புலம்பியவராக இவனைத் தேடிக், காவிரிக் கரையோடு சென்றனர் எனவும், முடிவில் மருதி யென்னும் கடல் தெய்வம் இவனை அவளுக்குக் காட்டித் தந்தது எனவும் உரைப்பர். இந்நூலில், இவனைக் காவிரி கொண்டு சென்றபோது, கரிகால் வளவனும், தன் கலிகொள் சுற்றத்துடன் கண்டிருந்ததாகவும், இது நிகழ்ந்தது கழாஅர் முன்றுறைக்கண் எனவும், 376ஆவது செய்யுள் உரைக்கின்றது. 396 ஆவது செய்யுளும், கருந்திறல் அத்தி ஆடணி நசைஇ, நெடுநீர்க் காவிரி கொண்டொளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது.

ஆதி மந்தி (376, 396) இவர் ஆட்டனத்தியைக் காதலித்து மணந்தவர். சோணாட்டவரான இவரைக் கரிகாலனின் மகளாகக் கருதுவாரும் உளர். (சிலம்பு). இவர், தம் காதலனைக் காவிரி கொண்டு செல்லவும், அதற்காற்றாது புலம்பிய புலப்பம் மிகுதியானதாகும். வெள்ளி வீதியார் என்பவர், 'ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் வருந்தவன் கொல்லோ? என உரைப்பதனால், அதனை நாம் அறியலாம்.

ஆரியர் (336, 386, 396, 398)

வடபுலத்தவரான ஆரியர் படையணிகள் வல்லத்துப் புறங்காட்டிலே சோழராற் சிதறுண்டு அழிந்த செய்தியும் (336), ஆரியப் பொருநன் பாணனொடு மற்போரிட்டு அழிந்த செய்தியும் (386), வஞ்சிவேந்தன் ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரையின் கண் வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்த செய்தியும் (396), ஆரியரின் இமயத்து அழகும், (398), வடபுலத்து இருந்துவந்த சந்தனக்கல்லினைப் பற்றிய குறிப்பும் காணப்பெறும்.

இளம்பெருஞ் சென்னி (375) இவனைப்பற்றிய குறிப்புக் காணப்பெறும் செய்யுள் இஃது ஒன்றேயாகும். இதன்கண், இவன், பாழிக் கோட்டையை வெற்றி கொண்டதும், அதற்கும் வடபாற் சென்று வடுகரை அழித்ததுமாகிய செயல்கள் குறிக்கப்பெற்றுள்ளன. 'குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் என, இவன் செய்த செயலுக்-