பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அகநானூறு - நித்திலக் கோவை


          நீங்கல் ஒல்லுமோ-ஐய!-வேங்கை
          அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
          மையலம் கடாஅஞ்செருக்கி மதஞ்சிறந்து
          இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
          பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் 1O

          புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
          கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
          உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
          இரும்புறாப் பெடையொடு பயிரும்
          பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே? 15

ஐயனே!

தன் சிறுத்த நெற்றி பசந்துபோகவும், பெருத்த தன் தோள்கள் தளரவும் அகன்ற அழகிதான தன் அல்குல் பகுதியினிடத்து இரேகைகள் அழகிழந்து வாடவும், பகலும் இரவும் மயங்கிக் கிடந்து, மெல்லெனப் பெய்தலைப் பொருந்திய மழைபோல, மலரனைய கண்களினின்றும் நீர்த் துளிகள் வீழ்ந்துகொண்டிருக்க, இவ்விடத்தே, நின் தலைவியாகிய இவளும் வருத்தம் அடைவாள். இதனைக் கருதாது, செய்கின்ற தொழிலிலேயே விருப்புற்று, இவளைப் பிரிந்து செல்லுதல், நினக்குப் பொருத்தம் உடையதாகுமோ?

வேங்கைப்புலி தாக்குவதாகிய தனக்குற்ற மாறுபாட்டினை, அதனோடு பொருதிப் போக்கிக் கொண்ட நெடிய நல்ல களிற்றியானையானது, மயக்கஞ்செய்கின்ற மதத்தினாலே செருக்குற்றதாகி, மதவெறியாலே மிகுந்ததுமாகி, வழிச் செல்பவரைக் கொல்லுகின்றதன்மையைக் கொண்டது. முள்ளம் பன்றிகளை உடையதான அகன்ற காட்டிடம்.

பெருத்த கைகளையுடையவான கரடியினங்கள் புற்றாஞ் சோற்றினைத் தேடியபடியிருக்கும் புற்றுகளைக் கொண்ட சுவர்களையுடையதாயும் புதர்கள் மண்டிக்கிடக்கும் இயல்பின தாயும் உள்ள பொதியினிடத்தே, கடவுள் வழிபாடு இல்லாது போய்க் கிடக்கும் கருத்த அடியினையுடைய தூண்களமைந்த தேவகோட்டத்தினிடத்தே, உடன்வாழ்ந்த பழைமையினாலே கைவிட்டுப் போதலைக் கருதாது, பெரிய காட்டுப்புறாக்கள் தம் பெடையோடும் கூடி இன்புற்றிருக்கும். பெருங்கற்களைக் கொண்ட ஊர்களையுடைய, அத்தகைய மலையடிவாரத்தே செல்வது நுமது வழியுமாகும். (அதனாலும், நீர் போதல் பொருந்துமோ? என்றனளாம்.)