பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 21


குன்றுகளின் உச்சியிடத்ததான பரணிடத்தே, சிறுதினைப் பயிரிற் படுகின்ற கிளிகளை ஒட்டுமாறு, எம்மையும் அமைத்திருப்பான்.

அவ்விடத்தே, பகலில் வந்து, அக்கிளிகளை எம்முடனிருந்து ஒட்டியும், வளமான பாறையிடத்தாகிய நிறைந்த சுனையிடத்துக் குவளையினது தேன் சொரிகின்ற ஒள்ளிய பூக்களை மிகுதியாகச் செறித்திருக்கின்ற எம் கூந்தலாகிய மெல்லணையிலே எம்முடன் கூடித் துயின்றும், பொழுது சாயக், காவலர்க்கு மறைந்து, காவலுடைய தினைப்புனத்தே நுழைந்து மேய்ந்து செல்லும் பெரிய களிற்றியானையினைப் போல, நீயும், கருமையான கொம்புகளையுடைய குறிஞ்சிச் செடிகளை கொண்டதான, நீ வாழும் ஊரினை நோக்கிச் செல்வாயாக!

சொற்பொருள் : 1. உழுவை புலி உழந்த போரிட்டு நொந்த உயங்கு நடை-வருத்தத்தால் தளர்ந்த நடை ஒருத்தல்-தலைமைச் செவ்வியுடைய பெரிய களிற்றியானை. 5. வெண் மழை - வெண் மேகம், மஞ்சு கவைஇ- கவிந்து. 6. கலம் - மட்கலம், 8 தொலையா வேல் - வெற்றி நீங்காத வேற்போர். வண்மை - மேலெறிந்து உவக்கின்ற ஆண்மைச் செவ்வியைக் குறித்தது.9. அணந்து எய்தா - நிமிர்ந்து அடையாத கன்முகை குன்றின் உச்சி, அது மலர்முகை போன்று செங்குத்தான பாறையாக இருத்தல்பற்றிக் கன்முகை என்றனர்; முகை - மொட்டு. இதணம் - பரண். 10.சிறுதினை - சிறுதினைப் பயிர்,14 அறைய பாறையிடத்ததான, மல்லல் - நீர்ப்பெருக்குடன் விளங்கிய, மலிர் - நிறைந்த, 14. பொழுது பட - பொழுது சாய

விளக்கம் : “உழுவையொடு உழந்த உயங்குநடை ஒருத்தல்' எனக் காட்டுயானை திரிதலையும், வடுவகிர் விழுப்புண் கழாஅக் கங்குல் ஆலி யழிதுளி பொழிந்த என, மழைக்காலத்துத் தன்மையினையும் கூறி, வழியின் ஏதத்துக்குத் தாம் அஞ்சுவதனை உணர்த்தி, இரவில் வரவேண்டாம் என்றனள். பகலில் வந்து இன்புற்றுச் செல்லலாம் என்றவள் தந்தையின் வேலாண்மை யைக் கூறியும், காவலர்க்கரந்து' என எச்சரித்தும், அதுவும் கைகூடாததே என்பதனையும் உணரவைத்தனள். இதனால், விரை விலே மணம்வேட்டு வருதலைத் துணியுமாறு அறிவுறுத்தினள் எனலாம்.

‘புலியொடு உழந்து புண்பட்ட உயங்குநடை ஒருத்தலின் நெடுவகிர் விழுப்புண்ணினை, மழைநீர் பெய்து கழுவுகின்ற நாடன்' என்றது, அவனும் காமத்தால் வருந்தி நொந்திருக்கும் தலைவியின் துயரைப் போக்கும் அருள் உள்ளம் உடையவனாகுதல் வேண்டும் என உணர்த்துவதற்காம்.