பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அகநானூறு - நித்திலக் கோவை



விளக்கம் : 'நெடுந்தகை! நீர்மையை தொழுதகு மெய்யை' என விளித்ததெல்லாம், அவனை அறிந்தமைகாட்டிக் கூறுதலாம். அத்தகையவன் தன் குறைகூறி இரந்து நிற்றல் வேண்டா என்பவள், பணிமொழி பயிற்றலின் என்றனள்.

'ஈன்று இளைப்படு பேடை இரியக் கடல்அலை உடைவது' காணாது அஞ்சியிருப்பாள் என்றனளுமாம்.

தலைவியிடம் இவன்பாற் காதல் தோன்றியதனை அறிவுறுத்துவாள்; குவளை யுண்கண் கலுழ நின் மாட்டு இவளும் பெரும்பேது உற்றனள் என்கின்றாள்.

311. நீடலர் அவர்!

பாடியவர் : மாமூலனார். திணை : பாலை துறை : பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு : புல்லியின் நாட்டைப் பற்றிய குறிப்பு.

(தலைவன் பொருளிட்டி வருதலின் பொருட்டாக வேற்று நாட்டிற்குச் சென்றனன். தலைவி அவன் பிரிவினைத் தாங்கவியலாதவளாய் நோயுற்றனள். அவன் மீள்வதாகக் குறித்த அந்தக் காலம் வரையினும் ஒருவாறு அடங்கியிருந்ததேனும், அவன் குறித்துச் சென்ற காலத்தும் வாராது போகவே, தலைவியின் துயரமும் அளவிற்கடங்காப் பேரளவினதாயிற்று. அவ்வேளை, அவளுடைய ஆருயிர்த் தோழியானவள், அவளைத் தேற்றுவாளாக, இவ்வாறு சில கூறுகின்றனள்.)

          இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
          அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை
          எழுதி யன்ன திண்ணிலைக் கதவம்
          கழுதுவழங்கு அரைநாள் காவலர் மடிந்தெனத்
          திறந்துநப் புணர்ந்து நும்மிற் சிறந்தோர் 5

          இம்மை உலகத்து இல்லெனப் பன்னாள்
          பொம்மல் ஓதி நீவிய காதலொடு
          பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
          வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
          மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி 10

          செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும்
          புல்லி நன்னாட்டு உம்பர் செல்லருஞ்
          சுரமிறந்து ஏகினும் நீடலர்
          அருண்மொழி தேற்றிநம் அகன்றிசி னோரே!