பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அகநானூறு -நித்திலக் கோவை


"வெயிலொளியைப் போன்ற வெண்பூக்கள் செறிந்திருக்கும் மாமரத்திலிருந்து குயில்கள் செய்கின்ற ஆரவாரத்தினை நம்முடனிருந்து கேட்க வருவேம்; என்று அவர் குறித்துச் சென்ற இத்தகைய இளவேனிற் பருவம் அவர் சென்றுள்ள அவ்விடத்தே இல்லைபோலும்” என, மெல்லென அக்காலத்துச் செவ்வியைக் கண்டு அவனை நினைந்தவராக இருந்தனம். அவ் வேளையிலே.

ஒன்றை விரும்பி நினைந்தவிடத்து அங்ஙனமே அது வந்து சேரக் களிகொள்ளும் உள்ளக்களிப்பினைப் போல, இனியவராகிய காதலரும் வந்து நம் எதிரே நின்றனர். அக்கணமே-

அன்னையும் அறிவுறும் வண்ணமாகப் பல நாட்கள் நம்மை வருத்தியவாறே, நம் நல்ல நெற்றியிற் படர்ந்த பசலைநோயும் நம்மைப் பிரிந்து எவ்விடத்துச் சென்றதோ?

சொற்பொருள்: 1. மாக விசும்பின் - வானினிடத்தே தொழில் உலந்தென - தொழில் செய்து முடிந்ததாக 3. அற்சிறம் - பனிக்காலம். 5. நகைமுகம் - ஒளியுடைய முகம் 7. சிதர் - வண்டு கன்னம் - பொற்கொல்லரின் சிறு தராசுத் தட்டு 12. தவிரிசை - விட்டிசைக்கும் இசை, 13 உதைத்து விடல் - தெறித்துவிடல் 14. மரன் ஏமுற்ற - மரங்கள் பூத்துக் குலுங்கி இன்புற்றுத் தோன்றிய; மானே முற்ற எனவும் பாடம்; அதற்கு மானினம் இன்புறுதலுற்ற என்பது பொருள்.22.என்னுழியது கொல் எங்குச் சென்றதோ? 23. அணங்கி - வருத்தி.

விளக்கம்: தலைமகனின் வரவினை உணர்ந்த தோழி, அவனை நினைந்து தாம் கொண்டிருந்த துயரமிகுதியினை எடுத்துக் கூறுவதனால், இது பாலைத்திணையாகக் கொள்ளப்பெற்றது.

பொன்னாற் செய்த சிறுதட்டிலே வெள்ளிக் கம்பித் துண்டுகள் விழுவது போலக் கோங்கம் பூவிடத்தே குரவ மலர்கள் விழுவதெனக் கூறுகின்ற நயத்தினை அறிந்து இன்புறுக.

"உண்ணிய மருங்கின் உள்ளம் போல்” என்பதற்கு உள்ளியவிடத்தே அந்த உள்ளத்து எழுந்த ஒன்றே வந்து எதிருறுமாறுபோல என்று பொருள் கொள்ளுக.

318. ஊதல் வேண்டும்!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறி வந்த தலைமகனை வரவுவிலக்கி வரைவு கடாவியது.