பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அகநானூறு - நித்திலக் கோவை


பூங்கணும்துதலும் பசப்ப நோய்கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அங்குடிச் சீறுர்ப்
படுமணி இயம்பப் பகலியைந்து உமணர் 5

கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து
எறிவளி சுழற்றும் அத்தம் சிறிதசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே.... பாய்கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை 10

நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட
கைகறித்து உரறும் மைதுங்கு இறும்பில்
புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன்மலை இறந்தே.

தோழீ!

அழகிய என் கண்களும் நெற்றியும் பசலையுறுமாறு துன்பத்தை அடைந்து, யான் இவ்விடத்தே தனித்திருந்து வருந்தவும், என்னைப் பிரிந்து செல்லுதலைத் துணிந்து, அவர் வாழ்ந்திருத்தற்கு வல்லவர் ஆயினார் என்றால்

தலைகுவிந்த குடிசைகளாகிய அழகிய குடியிருப்பினை உடைய சிற்றுாரினிடத்தே, பொருந்திய, மணிகள் ஒலி செய்யப் பகற்காலத்தே செல்லுதலைப் பொருந்தி, உப்பு வாணிகர் வளைந்த நுகத்தடிகளிலே செவ்வையான கயிற்றினாலே பூட்டிய பகடுகள், வண்டிகளை வருத்தத்துடனே இழுத்துச் செல்லும், வெப்பமான இடங்களிலே எழுகின்ற புழுதியைத் தொகுத்து வீசுகின்ற காற்றானது, சுழித்தடிக்கும் காட்டு நெறியிலே சிறிது தங்கியிருந்து

பாய்தலை மேற்கொண்டதாகப் பொருந்திய முதுகினை நெளிக்கும் சிறிய புலிக்குட்டியானது, நீண்டு உயர்ந்த நல்ல யானையானது நீர் வேட்கையினாலே சுனையிடத்தே இட்ட துதிக்கையினைக் கடித்து முழக்கமிடும் இருள்செறிந்த காட்டிட்த்தே, புலி புகுந்து குட்டியை ஈனுமாறு வறண்டுகிடந்த சுனையினையுடைய, பனிபடியும் உச்சியையுடைய பல மலைகளையும் கடந்து, தாம் செல்பவரும் ஆவாரோ? (ஆகமாட்டார் என்பது குறிப்பு)

சொற்பொருள்: 1. பூங்கண் - அழகிய கண். பூப்போலும் கண்ணும் ஆம்; அப்போது, குவளைமலர் போன்றது என்க.நோய்